தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தால் 1 கோடி வாக்காளர்கள் விடுபடும் ஆபத்து உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவம்பர் 2) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:
- வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) தற்போது உள்ள வாக்காளர் ஒவ்வொருவருக்கும் கணக்கெடுப்புப் படிவங்களை வழங்குவார் என்றும்; வாக்காளர் அல்லது அவர்களின் உறவினரின் பெயரை 2002 – 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற கடைசி சிறப்புத் தீவிர திருத்தப்பட்டியலில் உள்ள பெயருடன் இணைத்து சரிபார்க்க உதவுவார் என்றும் ; இந்த பணிக்காக முந்தைய சிறப்புத் தீவிர திருத்த தரவினை இந்திய தேர்தல் ஆணைய தரவுத்தளத்தில் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரும்போது வாக்காளர் ஒவ்வொருவரும் வீட்டில் இருப்பது கட்டாயம் எனத் தெரிகிறது. அவர் ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது மூன்று முறை சென்று சரி பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அவர் வரும்போது வாக்காளர் இல்லை என்றால் அவருடைய பெயர் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. இது கிராமப்புறத்தில் இருக்கிற கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், படிப்பறிவில்லாத ஏழை எளியவர்கள் முதலானவருக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கும்.
- பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் புலம்பெயர்ந்து சென்று வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க பல நூறு அல்லது பல்லாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும். அந்த அளவுக்குப் பணம் செலவு செய்து வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்ப்பதற்கு அவர்கள் முயற்சி செய்வார்கள் என்று கூற முடியாது.
 - பழங்குடி மக்கள் குறிப்பாக பழங்குடி இருளர், நரிக்குறவர், உள்ளிட்ட அலைந்து திரிந்து வாழும் பழங்குடி மக்கள் ( nomadic tribes) பலருக்குத் தேர்தல் ஆணையம் கேட்டிருக்கும் ஆவணங்கள் எதுவுமே கையில் இருக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் பெரும்பாலும் நீர்நிலைப் புறம்போக்கில் குடிசை போட்டு வாழ்வதால் பட்டாவோ தொகுப்பு வீடு ஒதுக்கீட்டு ஆணையோ அவர்களிடம் இருக்காது. பலருக்கு சாதிச் சான்றிதழ் கிடைப்பதில்லை. எனவே அவர்களின் பெரும்பாலோர் வாக்காளர் பட்டியலில் விடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
 - அரபு நாடுகளில் சென்று வேலை செய்யும் முஸ்லிம்கள் பலரும் இந்த கணக்கெடுப்பின்போது ஊருக்குத் திரும்ப முடியாத காரணத்தால் அவர்களும் இந்த கணக்கெடுப்பில் விடுபடக்கூடும்.
 - வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மழை சூறாவளி ஆகியவற்றால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்படும். நவம்பர் மாதம் முழுவதுமே இந்த மழையின் தாக்கம் இருக்கும். இந்த நேரத்தில் இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்வது நடைமுறையில் சாத்தியமாகத் தெரியவில்லை.
 - ஒவ்வொரு வாக்காளரும் 2002 – 2004 சிறப்பு வாக்காளர் பட்டியலில் இருந்த தன்னுடைய பதிவை அடையாளம் கண்டு இப்போதைய விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொருவருக்கும் நீண்ட நேரம் தேவைப்படும். எனவே அதற்கான அலுவலர் ஒரு நாளில் 20 வாக்காளர்களைக் கூட பதிவு செய்ய முடியாது. அவ்வாறு கணக்கிட்டால் இந்தப் பதிவுப் பணிக்கு சில மாதங்கள் தேவைப்படும். எனவே வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு ஒரு மாத கால அவகாசம் போதாது.
 - பழைய பதிவை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் இப்போதைக்கு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து விடலாம் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு கொடுத்தால் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். நோட்டீஸ் வழங்கப்பட்டவர்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருக்கும் 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி தான் இந்த நாட்டின் குடிமகன் தான் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருக்கிற என் ஆர் சி தயாரிப்பதற்கான வழிமுறையாகும்.
 - தேர்தல் ஆணையம் வாக்காளரின் குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றது அல்ல. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் தான் அது வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க முடியும். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வாக்காளரின் குடியுரிமையை அது தீர்மானிக்க முடியாது. தனக்கு இல்லாத அதிகாரத்தை இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை மூலம் தேர்தல் ஆணையம் செயல்படுத்த முற்படுகிறது. இந்த சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்துத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை அறிவித்திருப்பது நீதியை மறுப்பதாகும்.
 
- தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை 2002 – 2004 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலோடு உத்தேசமாக பொருத்திப் பார்த்ததில் சுமார் 40 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்களே முழுமையாகப் பொருந்துகின்றன எனக் கூறப்படுகிறது. எவ்வளவுதான் முயற்சித்தாலும் 10 முதல் 20 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்கள் இதில் விடுபட்டுப் போகும். அதாவது தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் விடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை சீர்குலைப்பதற்கான திட்டமிட்ட சதி என்று கருத வேண்டி உள்ளது.
 - மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை ( SIR) எதிர்க்கிறது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்பு வரும் வரை இந்த எஸ் ஐ ஆர் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் அதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
 
இதனிடையில் எஸ்.ஐ.ஆர் குறித்து இங்கே பங்கேற்றிருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.
