ஆதார் திட்டத்தால் அரசுகளின் பல்வேறு வகையான செலவுகள் குறைந்து பல கோடி ரூபாய்கள் மிச்சமாகியுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம், நலத்திட்டங்களில் ஏற்படும் கசிவை சுமார் 12.7 சதவீதம் குறைத்துள்ளதாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. இது உலக அளவில் பொது நலத்திட்டங்களில் நேர்மையை நிலைநாட்டுவதில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த அறிக்கையை போஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) வெளியிட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் ஆண்டுதோறும் 21 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றன. ஆனால், இதில் 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு மோசடிகள் தவறு அல்லது திறமையின்மை காரணமாக வீணாகிறது.
இந்தியாவில், பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் நேரடி டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள், உணவுப் பொருட்கள், சமூக ஓய்வூதியம், எல்பிஜி மானியம், உர மானியம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு ஊதியம் போன்றவற்றை கடைசி நபர் வரை கொண்டு சேர்ப்பதை வலுப்படுத்தியுள்ளன. இதனால் இடைத்தரகர்களின் தேவை குறைந்து, நிர்வாகச் செலவுகளும் குறைந்துள்ளன.
உலக வங்கியின் மதிப்பீடுகளின்படி, ஆதார் மூலம் செயல்படுத்தப்படும் அமைப்புகள் மூலம் மோசடியான கோரிக்கைகள், இரட்டைப் பதிவுகள் மற்றும் இடைத்தரகர்களை நீக்குவதன் மூலம் இந்தியா ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சேமிக்க முடியும் என்று இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஆதார் கார்டு நிர்வாகச் செலவுகளைக் குறைத்துள்ளது. மேலும், உலகின் மிகப்பெரிய சமூக மானியத் திட்டங்களில் கசிவையும் குறைத்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து கிடைத்த தகவல்கள், உண்மையான பயனாளிகளைத் தவிர்த்துவிடாமல், நலத்திட்ட உதவிகள் சிறப்பாகச் சென்றடைவதை உறுதி செய்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான நேர்மைத் தீர்வுகள், நலத்திட்டங்களில் ஏற்படும் கசிவை கணிசமாகக் குறைத்து, நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தி, பொதுச் செலவினங்கள் குடிமக்களுக்கு அதிகபட்சப் பலனை அளிப்பதை உறுதிசெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு, பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், நாட்டின் 11 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக 3.7 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளது. PFMS (Public Financial Management System) அமைப்பை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மற்றும் நேரடிப் பயன் பரிமாற்றத்துடன் (DBT) ஒருங்கிணைத்ததன் மூலம், மானியங்களும் நலத்திட்டப் பலன்களும் நேரடியாக மக்களுக்குச் சென்றடைவதை உறுதிசெய்து கசிவுகளையும் இரட்டைப் பதிவுகளையும் குறைத்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
