எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த ‘குஷி’ திரைப்படம் 2000ஆவது ஆண்டு மே 19 அன்று வெளியானது. பல தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது. வரும் 25ஆம் தேதியன்று இப்படம் தமிழில் ‘ரீரிலீஸ்’ ஆகவிருக்கிறது.
இது தொடர்பாகச் சமீபத்தில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, விநியோகஸ்தர் சக்திவேலன், இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இதில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, தான் இயக்கிய படங்கள் வெளியாவதற்கு முன்பாகப் பல முறை பார்த்ததாகவும், ஒருமுறை கூட ரசிகனாகப் பார்த்ததில்லை எனவும் கூறினார். அந்த நிகழ்ச்சியின்போது ‘குஷி’ படப் பாடல்கள் திரையிடப்பட்டபோது, தான் முதல்முறையாக ஒரு ரசிகனாகக் கண்டதாகத் தெரிவித்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற ‘கட்டிப்பிடி கட்டிப்பிடிடா’ பாடல் இன்றும் பலரால் விரும்பப்படுவதாகச் சொன்னார் எஸ்.ஜே.சூர்யா. ‘ஐட்டம்’ சாங் என்று முத்திரை குத்தப்பட்ட அந்தப் பாடல், ஒரு கிளாசிக்கான ரொமான்ஸ் மெலடியில் இருந்து உருவாக்கப்பட்டது என்றார்.
அது எப்படி உருவானது என்ற பின்னணியையும் பகிர்ந்து கொண்டார்.
”செந்தமிழ் தேன்மொழியாள் நிலவினில் சிரிக்கும் மலர்க்கொடியாள் என்ற பழைய பாடலை இசையமைப்பாளர் தேவாவிடம் சொல்லி, அதனை இப்படி மாற்றலாம் என்று சொன்னேன்” எனச் சொன்ன எஸ்.ஜே.சூர்யா, “செந்தமிழ் தேன்மொழியாள்.. கட்டிப்பிடி கட்டிப்பிடிடா..” என்று அந்த இரண்டு பாடல்களின் முதல் வரிகளையும் சேர்த்தாற்போலப் பாடிக் காட்டினார்.
”எத்தனையோ கிளாமர் பாடல்கள் வந்தாலும், இது ஏன் ஈர்க்கிறது? ஏனென்றால், ஒரு கவித்துவமான பாடலில் உள்ள மெலடியில் இருந்து அது உருவானது. அது, எப்போதும் கதகதப்பாக இருந்து நம்மை ஈர்க்கிறது. அதோடு வைரமுத்துவின் வரிகள், மும்தாஜின் நடனம், தாரா மாஸ்டரின் நடன வடிவமைப்பு, விஜய்யின் எனர்ஜி என்று எல்லாமே கலந்து அந்த பாடலை இன்றும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது” என்று கூறினார் எஸ்.ஜே.சூர்யா.
‘குஷி’ படத்தில் வரும் ‘மொட்டு ஒன்று’ பாடலின் வரிகளை முதலில் வைரமுத்து எழுதித் தர, அதன்பின்னர் அதற்கு தேவா இசையமைத்ததாகவும் தகவல் பகிர்ந்தார். ‘புதிய பறவை’யில் வரும் ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ போல அந்த பாடல் இருக்க வேண்டுமென்று தான் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.
இது போன்ற தகவல்களை முதன்முறையாக வெளியாகும்போது இயக்குனரோ, இசையமைப்பாளரோ, இதர கலைஞர்களோ நிச்சயம் பகிர மாட்டார்கள். அந்த நேர பரபரப்பு அதனை அனுமதிக்காது. ஆனால், ‘ரீரிலீஸ்’ எனும் வைபவம்தான் எத்தனையெத்தனை ரசிகர்களுக்குப் புதையலைப் போல அள்ளித் தருகிறது..!