SIR வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் ‘மாஸ்’ காட்டிய மமதா.. மாநில மக்களுக்காக நீதி கேட்டு.. உருக்கமான வாதம்!

Published On:

| By Mathi

Mamata Banerjee

மேற்கு வங்க மாநில மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்தில் தாம் வாதாடுவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உருக்கமாக தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மமதா பானர்ஜி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தாம் சட்டப்படிப்பை நிறைவு செய்தவர் என்ற அடிப்படையில் தம்மையே வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்திடம் கோரியிருந்தார் மமதா பானர்ஜி. இதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இந்திய அரசியல் வரலாற்றில் மாநிலத்தின் முதல்வர் ஒருவர், உச்சநீதிமன்றத்தில் மாநில மக்களுக்காக வழக்கறிஞராக முதல் முறையாக ஆஜரானதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பாக இன்று SIR-க்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது ஆஜரான மமமதா பானர்ஜி முன்வைத்த உருக்கமான வாதம்:

  • மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்புக்கு நன்றி
  • நீதி கேட்டு நாங்கள் கதறினோம்.. எங்களுக்குதான் நீதி கிடைக்கவில்லை.. தேர்தல் ஆணையத்துக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதியும் பதிலே இல்லை.
  • என்னுடைய அரசியல் கட்சிக்காக நான் போராடவில்லை.. ஒட்டுமொத்த மேற்கு வங்க மாநில மக்களுக்காக நான் போராடுகிறேன்.
  • மேற்கு வங்கத்தில் Roy என்ற பெயரில் ஏராளமானோர் வாக்காளர்களாக உள்ளனர். ஆனால் இதில் சிறிய பிழையாக Ray என தவறுதலாக ஆவணங்களில் இருந்தாலே அனைத்து பெயர்களையும் நீக்கிவிடுகின்றனர். இதை எல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளவே இல்லையே?
  • மேற்கு வங்கத்துக்கு மட்டும் ஏன் இந்த அநீதி இழைக்கப்பட வேண்டும்?
  • எங்களது பக்கத்து மாநிலமான அஸ்ஸாமில் இப்படி எல்லாம் செய்யவே இல்லையே?
  • திருமணமான பெண்கள், கணவரின் பெயரை கொடுத்தாலும் நீக்கிவிடுகின்றனர்.
  • 4 மாதங்களாக பெயர்களை நீக்குகிற பணிதான் நடக்கிறதே தவிர, வாக்காளர் சேர்ப்பே நடத்தப்படவில்லை. மேற்கு வங்கத்தில் SIR-என்பதே வாக்காளர்களை நீக்க மட்டும்தான் நடத்தப்படுகிறது. மாநில அரசு தரக் கூடிய எந்த ஒரு ஆவணத்தையும் ஏற்பதே இல்லை.
  • தேர்தல் ஆணையம் மைக்ரோ அப்சர்வர்களை நியமித்துள்ளது; அவர்களுக்கும் ஆட்சி நிர்வாகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து இந்த மைக்ரோ அப்சர்வர்களை நியமித்திருக்கிறது தேர்தல் ஆணையம். குறிப்பாக பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களில் இருந்தே அனைவரும் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
  • நாங்கள் கதவுகளுக்குப் பின்னால் நின்று கதறி அழுது நீதி கேட்கிறோம்.

இவ்வாறு மமதா பானர்ஜி வாதிட்டார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வானது, “ வாக்காளர் சேர்ப்புக்கான கால அவகாசத்தை தேவைப்படும் நிலையில் நீட்டிக்க தயார்” என வாய்மொழியாக வாக்குறுதி அளித்தனர்.

அத்துடன், வாக்காளர் பெயர்களில் உள்ள Spelling மிஸ்டேக் என்பது நாடு முழுவதுமே இருக்கிற ஒரு பொதுப் பிரச்சனை.. இதை தேர்தல் ஆணையம் எப்படி சரி செய்யும்? எனவும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு பிப்ரவரி 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share