தமிழ் சினிமாவில் மே தினத்தை முன்னிட்டு வெளியான வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. Simran predicted Tourist Family’s collection
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஃபீல்குட் மூவியாக கவர்ந்தது.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்த இப்படத்தில் கமலேஷ், யோகிபாபு, எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரையரங்கில் வெளியாகி இருவாரங்களை நிறைவு செய்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி, இதுவரை ரூ. 54 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றியை பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து படக்குழுவினர் நேற்று கொண்டாடினர்.
சூப்பர்ஹிட் – அப்போதே சொன்னேன்!
அதில் பங்கேற்று நடிகை சிம்ரன் பேசுகையில், “நான் இந்தியாவில் இல்லாதக் காரணத்தால் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்.
கதை கேட்டப்போதே இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும் என்று இயக்குநர் அபியிடம் சொன்னேன்.
இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்குப் பெருமைப்படுகிறேன். நான் 30 வருடமாக இந்த சினிமாத்துறையில் இருக்கிறேன். ரசிகர்கள் இல்லையென்றால் இந்த வெற்றி அடைவதற்கு வாய்ப்பே இல்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.
சசிகுமார் சார் மிகவும் தன்னடக்கமான ஒரு மனிதர். நல்ல இயக்குநர் மற்றும் நடிகர். டயலாக் எப்படி பேச வேண்டும். தமிழில் அதுவும் இலங்கை தமிழில் எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். அவரிடம் இருந்துக் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது.
20 வருடங்களுக்கு பிறகு இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய படக்குழு அனைவருக்கும் நன்றி” என சிம்ரன் உருக்கமாக பேசினார்.