ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை மிகச் சிறப்பாகப் பிடிக்க ஓடிச் சென்று டைவ் அடித்தார் ஸ்ரேயாஸ் ஐயர். அப்போது, அவர் இடது பக்க விலா எலும்புக் கூண்டு பகுதியில் பலமாகத் தரையில் மோதியதில் காயம் ஏற்பட்டது.
மைதானத்தில் வலியால் துடித்த அவர் உடனடியாக ஓய்வறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது மண்ணீரலில் காயம் ஏற்பட்டு உள் இரத்தக் கசிவு இருந்தது கண்டறியப்பட்டது.
இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் உடனடியாக சிட்னியில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பிசிசிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது மருத்துவ ரீதியாக சீராக உள்ளார் என்றும், குணமடைந்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று பரவுவதைத் தடுக்கவும், காயத்தைக் கண்காணிக்கவும் அவர் இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் மருத்துவக் குழுவும் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகிறது.
விரைவில் அவர் முழுமையாகக் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
