“தமது ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு ‘sharp message’-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை இயக்குநர் மாரி செல்வராஜ்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
பைசன் திரைப்படம் குறித்து தமது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: Bison Kaalamaadan: மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!
தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
.
அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு ‘sharp message’-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ் அவர்கள்.
சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக ‘பைசன்’ மிளிர்கிறது.
இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மாரியின் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ள துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட நடிகர்கள், பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
இதுபோல மேலும் பல படைப்புகளைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
