–ராஜ திருமகன்
ஏழை ஹீரோ பணக்கார ஹீரோயின் என்ற சப்புக் கொட்டும் காம்பினேஷன், சினிமாவில் வழக்கொழிந்து போன நிலையில் இப்போது ஜெகஜ்ஜோதியாக வெளிச்சம் கொடுப்பது, நம்ம ஹீரோ அடுத்த மாநில அல்லது நாட்டைச் சேர்ந்த ஹீரோயின் அல்லது வில்லி என்ற கதாபாத்திர அமைப்புதான்.
பொதுவாக மலையாளப் படங்களில் அந்தப் பெண் தமிழ்ப் பெண்ணாக இருப்பார். தெலுங்குப் படங்களிலும் அப்படியே. தமிழ்ப் படம் என்றால் கதாநாயகி முதல் காமெடி நடிகை வரை மலையாளப் பெண்கள்தான்.
இந்த களங்கத்தை கழுவ வேண்டும் என்றோ என்னவோ, சந்திரமுகி படத்தில் ரொம்ப முயன்று தெலுங்குப் பெண்ணாக மாற்றினார் பி .வாசு. அதற்கு முன்பு கன்னடத்தில் எடுத்தா ஆப்தமித்ராவிலும் ஹீரோ கன்னடர் வில்லி தெலுங்குப் பெண்.
இந்த இரண்டு படங்களுக்கும் மூலமான மணிச்சித்திரத்தாழு மலையாளப் படத்தில் அந்த வில்லி தமிழ்ப் பெண்தான்.
எனவே கன்னடம் தெலுங்கு மொழிகளுக்கு பி.வாசு கதை உரிமை வாங்கியபோது, ” மலையாளப் பெண்ணாக மட்டும் பதிலுக்கு காட்டி விடாதீர்கள் பிளீஸ் ” என்று மனிசித்திரத்தாழு படத்தின் தயாரிப்பாளர்கள், அனேகமாக குருவாயூர் கோவிலில் சத்தியம் வாங்கி இருக்க வேண்டும்.
” வேற ஒண்ணும் இல்லீங்க இந்த மொழிகளில் எல்லாம் வில்லி பேசினால், எங்க ஆடியன்சுக்கும ஓரளவு புரியும்” என்று எல்லோருமே ஒரு லாஜிக் பூச்சுப் பூசுவார்கள்.
இந்தக் கதை இப்போது எதற்கு?
தமிழில் வரும் பொங்கல் வெளியீடாக (அதாவது விஜய்யின் ஜனநாயகன் படத்துடன்) திரைக்கு வர இருக்கும் ஒரு படத்துக்கு ‘தமிழ்(ப்) பையன் இந்தி(ப்) பொண்ணு’ என்று பெயர் வைத்து, பொங்கல் வைத்து இருக்கிறார்கள். ( ரெண்டு ப் இல்லன்னா அது ரெண்டு லிப்ஸ் இல்லாதது மாதிரி)
”இரண்டு வெவ்வேறு பின்னணிகளை கொண்ட நாயகனும் நாயகியும் காதலில் விழுகின்றனர். இவர்கள் காதலுக்கு எத்தகைய இடையூறுகள் எழுகின்றன? அத்தனை தடைகளையும் வெற்றிகரமாக கடந்து எவ்வாறு இணைகின்றனர் என்பதை கூறியிருக்கிறோம். ஒரே திரைப்படம் பல மொழிகளில் வெளியாகும் இன்றைய காலகட்டத்தில், தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படத்தை தமிழில் மட்டுமே எடுத்திருக்கிறோம் ” என்கிறார், தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் சமீர் அலி கான் என்பவர்.
மரோசரித்ரா படத்தில் தமிழ்ப் பையன் (கமல்ஹாசன்) தெலுங்குப் பொண்ணு (சரிதா) காதலையும், அடுத்து மூன்று ஆண்டுகளில் அதே கதையை, தமிழ்ப் பையன் (கமல்ஹாசன்) இந்திப் பொண்ணு (ரதி அக்னிஹோத்ரி) காதல் என்று மாற்றி இந்தியில் ஏக் துஜே கேலியே (MADE FOR EACH OTHER) என்ற பெயரிலும், துணிச்சலாக எடுத்து இரண்டையும் மாபெரும் வெற்றி பெற வைத்தவர் கே. பாலச்சந்தர்
ஒரு நன்றி கார்டு போட்ருங்க சமீர் அலி கான்.
