ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரு காவலர்களில் ஒருவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதும், மதுபோதையில் அரை நிர்வாண கோலத்தில் நின்றபடி பெண்களைப் பார்த்து அருவருக்கத்தக்க முறையில் சைகை காட்டி பேசியதாக மற்றொரு காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கரியாலூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பிரபு. இவர் 2011ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர்.
அதே காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார் யுவராஜ். இவர் 2013ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் கரியாலூர் காவல் நிலையம் அருகேயுள்ள பூங்கா அருகில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் நடத்தி வரும் மருகதாசியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஹான்ஸ் விற்பனை செய்ததாக கூறி காவலர் பிரபு கைது செய்தார்.

அதன்பின்னர் மருகதாசியின் 17 வயது மகளை தினமும் சந்தித்து பேசி வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அப்போது ‘நான் உன் தந்தையை சீக்கிரம் விட சொல்கிறேன். இனி எது வித்தாலும் யாரும் கேட்கமாட்டங்க’ எனக் கூறி பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.
இதனை தனது பெற்றோரிடம் கூறி அந்த சிறுமி அழுத நிலையில், அவரது பெற்றோர், ஏட்டு பிரபு மீது முதல்வரின் தனிப்பிரிவு, தமிழக டிஜிபி மற்றும் விழுப்புரம் சரக டிஜஜி ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா தலைமையில் தலைமை காவலர் பிரபுவை கச்சராபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் 17 வயது சிறுமிக்கு காவலர் பிரபு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதால் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்திய நிலையில் நேற்று கடலூர் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.
தான் கைதானதற்கு கரியாலூர் காவல் நிலையத்தில் தன்னுடன் பணியாற்றும் தலைமை காவலர் யுவராஜ் தான் காரணம் என்பதையறிந்த பிரபு அவரை பழிவாங்க துடித்தார்.

இதற்கிடையே யுவராஜின் வீடியோ அருவருக்கத்தக்க வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பட்டப்பகலில் மது அருந்திய நிலையில் பள்ளி மாணவர்கள் செல்லும் பொதுப்பாதையில் யுவராஜ் உள்ளாடையுடன் நின்றபடி அருவருக்கத்தக்க முறையில் சைகை காட்டி பேசியது பதிவாகியுள்ளது. காவலர் யுவராஜ் சமீபத்தில் குழந்தை கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமனின் ஓட்டுநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி, தற்போது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், யுவராஜ் ஆயுதப்படை பிரிவுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் ஒரே நேரத்தில் ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றும் போலீசார் அடுத்தடுத்து பாலியல் வழக்கில் சிக்கியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.