ஒரு மாதத்தில் செந்தில்பாலாஜி அமைச்சராகி விடுவார்:  ED கிளப்பிய டவுட்! உச்ச நீதிமன்றம் சொன்ன பதில்!

Published On:

| By Aara

செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், அவரது ஜாமீனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை இன்று (ஏப்ரல் 28) உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சுமார் ஒன்றரை வருட சிறைவாசத்துக்குப் பின் கடந்த 2024 செப்டம்பர் 26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது.

ADVERTISEMENT

இதையடுத்து செப்டம்பர் 29 ஆம் தேதி செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கி ஏற்கனவே வகித்த துறைகளான டாஸ்மாக்,  மின்சாரம் ஆகிய  துறைகளையும் வழங்கினார் முதலமைச்சர்.Senthil Balaji  Resign supreme court reaction

இதன் பிறகு… செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியிலிருப்பதால் சாட்சியங்களை கலைக்க முயற்சிக்கிறார், எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று  வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில்  வழக்குத் தொடுத்தார்.  இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து கொண்டு செந்தில்பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கு விசாரணையில் செந்தில்பாலாஜி மீது கடுமையான அதிருப்தி தெரிவித்தனர்  உச்ச நீதிமன்ற நீதிபதிகள். ஏப்ரல் 8 ஆம் தேதி செந்தில்பாலாஜி தனது அபிடவிட்டில், ‘ஜாமீன் நிபந்தனையில் அமைச்சராக பதவியேற்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி உச்ச நீதிமன்றம், ‘நாங்கள் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் அளித்தது அவ்வழக்கின் மெரிட் படி அல்ல.  விசாரணை  முடியும் வரை சிறையில் இருக்க வேண்டாம் என்ற அடிப்படையில்தான்.  ஜாமீன் வழங்கும்போது செந்தில்பாலாஜி அமைச்சராக இல்லை. ஆனால் இரண்டே நாட்களில் அமைச்சராகிவிட்டார் என்றால் அவர் என்ன சொல்ல வருகிறார்?

ADVERTISEMENT

செந்தில்பாலாஜி அமைச்சராக இருக்க விரும்புகிறாரா? அல்லது ஜாமீனில் வெளியே இருக்க விரும்புகிறாரா? ஏப்ரல் 28 ஆம் தேதி பதில் சொல்லுங்கள்” என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக ரியாக்ட் செய்தது. Senthil Balaji  Resign supreme court reaction

இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.  உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பில் தமிழ்நாடு அரசின் அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில்பாலாஜி ராஜினாமா செய்த தகவலை எழுத்துபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான  சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,  “இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை பாலாஜி மீண்டும் அமைச்சராகக் கூடாது என நிபந்தனை விதிக்கவேண்டும்” என்று  நீதிபதிகள் அபய் எஸ் ஓகே, ஏஜி மாசி ஆகியோர் அடங்கிய அமர்வை வலியுறுத்தினார்.

”அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கிலும் இதே போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தகைய நிபந்தனையை நீதிமன்றம் விதிக்காவிட்டால், ஒரு மாதத்திற்குப் பிறகு செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராகிவிடுவார்” என்று கூறினார் சொலிசிட்டர் ஜெனரல்.  நீதிபதி ஓகா வரும்  மே 24 அன்று ஓய்வு பெறுகிறார். அதை குறிக்கும் வகையில்தான் இன்னும் ஒரு மாதம் கழித்து செந்தில்பாலாஜி அமைச்சராகிவிடுவார் என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறுகிறார் என்று நீதிமன்றத்திலேயே பேச்சுகள் எழுந்தன.

அப்போது நீதிபதி ஓகா,   “செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராவார் என்பது உங்கள் அச்சமா? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்த கட்டத்தில், ஜாமீனை ரத்து செய்ய நீங்கள் விண்ணப்பிக்கலாம்,” என்று நீதிபதி ஓகா பதிலளித்தார்.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,  “செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோதே, இலாகா இல்லாத அமைச்சராக இருந்தவர். அவர் மீதான  ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கில் மாநில அரசுதான்  பிராசிக்யூசன் தரப்பாக இருக்கிறது. எனவே  செந்தில் பாலாஜியின் செல்வாக்கு தொடரும்” என்று குறிப்பிட்டார்.

ஆனால் நீதிபதி ஓகா, “செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை   ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதால், உங்கள் விண்ணப்பத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறிவிட்டார்.

அப்போதும் விடாத துஷார் மேத்தா,  “செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணையை வேகப்படுத்தும் படி விசாரணைக்கு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், ஏனென்றால் செந்தில்பாலாஜி அந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்துகிறார்” என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது செந்தில்பாலாஜி தரப்பின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி,   சொலிசிட்டர் ஜெனரலின் வாதத்தை மறுத்தார்.   S

enthil Balaji  Resign supreme court reaction

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் பெஞ்ச் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காமல் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share