தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயரிரிழந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
அரசியல் கட்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் அரசு மாவட்ட தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த முதல்வர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், எனக்கும் தொடர்பு கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் செல்ல உத்தரவிட்டார்.
கூடுதல் மருத்துவர் வரவழைத்து உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் நேரில் செல்ல உத்தரவிட்டுள்ள நிலையில் அவர்களும் கரூர் வந்து கொண்டிருக்கின்றனர்.
நாளை முதல்வர் இங்கு நேரில் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளார். தற்போது 46 பேர் தனியார் மருத்துவமனையிலும் 12 பேர் மாவட்ட கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நம்முடைய மாவட்டத்தின் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் அனைவரும் இப்போது பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் கூடுதலாக நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் வரவழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று இரவே அவர்கள் இங்கு வந்து சிகிச்சை அளிக்க உள்ளனர்.
விசாரணை குழு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். உயிர் காப்பது மிகவும் முக்கியம் மற்ற விஷயங்களை நாளை பார்க்கலாம் என்று தெரிவித்தார்.