டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவிப்பதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
திருச்சி டிஐஜி வருண் குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
இருவரும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சீமான் பேசி வருவதாகவும், தனக்கு எதிரான ஆதாரமற்ற அர்த்தமற்ற கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
தனக்கு 2.10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சீமானுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டிருந்தார் டிஐஜி வருண்குமார்.
இந்த நிலையில் இந்த வழக்கை எண்ணிட கோரிய மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், “வழக்கு எண்ணிடும் நிலையில் உள்ளது. இந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வழங்காமல் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு எதிராக சீமான் பேச இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து, இந்த மனு தொடர்பாக சீமான் பதிலளிக்க உத்தரவிட்டார்.
