ADVERTISEMENT

உத்தரவுகளை மதிப்பதில்லை… கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் : தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Kavi

Supreme Court

தெருநாய் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விவகாரத்தில், நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்தத் தவறிய மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. 

தெருநாய்கள் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களாகப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. ஆகஸ்ட் 11, 2025 அன்று டெல்லி-என்சிஆர் பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடித்து, காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று முதலில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22, 2025 அன்று நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை மாற்றியமைத்தது.

புதிய உத்தரவின்படி, தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்தும், தடுப்பூசி போட்டும், குடல் புழு நீக்கிய பின்னரும் அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் விடப்பட வேண்டும். ரேபிஸ் பாதிப்புள்ள நாய்கள் அல்லது ஆக்ரோஷமான குணம் கொண்ட நாய்களுக்கு மட்டும் இது பொருந்தாது என்று தெளிவுபடுத்தியது.

ADVERTISEMENT

மேலும், நகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு வார்டிலும் நாய்களுக்கு உணவு வழங்குவதற்கான பிரத்யேக இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும், பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பதற்கு முழுமையான தடை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், ஆகஸ்ட் 22 அன்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அமல்படுத்தவில்லை. பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்வதிலும் அலட்சியம் காட்டியதாக கடந்த அக்டோபர் 27 அன்று உச்ச நீதிமன்றம் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியது.

ADVERTISEMENT

தலைமைச் செயலாளர்கள் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் இருப்பதையே இது காட்டுவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். “தலைமை செயலாளர்கள் உத்தரவுகளை மதிக்காமல் இருக்கும்போது, நேரில் வந்துதான் விளக்கமளிக்க வேண்டும்” என்று நீதிபதி விக்ரம் நாத் கூறினார்.

இந்த நிலையில், இன்று (அக்டோபர் 31) உச்ச நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் எடுத்துக்கொண்டது.

அப்போது, மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா தவிர மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களும் நவம்பர் 3, 2025 அன்று காலை 10:30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் நேரில்  ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

தலைமைச் செயலாளர்கள் காணொலிக் காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கோரிக்கையையும் நிராகரித்து, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்காதவர்கள் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று திட்டவட்டமாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share