டெல்லியில் இன்று மாலை நடந்த கார் குண்டு வெடிப்பில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கோவையில் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே இன்று (நவம்பர் 10) மாலை நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
டெல்லில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், டெல்லி முழுவதும் போலீசார் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மும்பையில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை கோவை மற்றும் மதுரையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். இம்மாவட்டங்களில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கோவையைப் பொறுத்த வரை மத்திய ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் பயணிகளின் உடைமைகள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
மேலும், மாநகர போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் நிலைம் மற்றும் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் சோதனையும் மேற்கொண்டு உள்ளனர். கோவை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்றுமுன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பாஜகவினர் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
டெல்லி வெடி விபத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.
