டிஜிட்டல் உலகத்தில் இப்படியெல்லாம் கூடவா ஏமாற்றுவார்கள் என்று நினைக்கக் கூடிய அளவுக்கு சமீப காலமாக மோசடியாளர்கள் புது புது ஐடியாக்களுடன் உலா வருகிறார்கள். அவர்களிடம் மிக உஷாராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த சம்பவம்.
சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் ஓலா, ரேபிடோ, ஊபர் மற்றும் டிராவல் ஏஜென்சிகள் மூலம் வாடகை கார்கள், ஆட்டோக்கள் இயங்குகின்றன. காலையில் அலுவலகம் செல்வதற்கோ, அவசரமாக மருத்துவமனைக்கு செல்வதற்கோ அல்லது குடும்பத்துடன் வெளி ஊருக்கு செல்வதற்கோ இந்த கார்கள் வசதியாக இருக்கும்.
அந்த நிறுவனங்களின் ஆப்களிலோ அல்லது வெப் சைட்டிலோ புக் செய்யும் போது 5 முதல் 10 நிமிடங்களில் உங்கள் வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும்.
இப்படிப்பட்ட நிலையில் வாடகை கார் ஓட்டுநர்களை குறி வைத்து பல மோசடியாளர்கள் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக சஞ்சய் வர்மா என்ற மோசடியாளர் ஓட்டுநர்களிடம் மோசடி செய்து வரும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
பெங்களூரு, புதுச்சேரி என நீண்ட தொலைவுக்கு கார் புக் செய்து, தான் இருக்கும் இடத்துக்கு கார் வந்தவுடன் டிப் டாப்பான உடையில் காரில் ஏறி பயணிக்கும் சஞ்சய் வர்மா ஓட்டுநரிடம் லேசாக பேச்சு கொடுப்பார்.
”எத்தனை வருஷமா டிரைவரா இருக்கீங்க? சாப்டீங்களா? எப்படி குடும்ப செலவ சமாளிக்கிறீங்க?” என கரிசனத்தோடு சஞ்சய் வர்மா கேள்விகளை அடுக்குவார்.
அதன்பின்னர், நகரப்பகுதிகளிலோ, நெடுஞ்சாலைகளிலோ கூட்டம் இல்லாத அல்லது தனியாக இருக்கும் பார்களை கண்ணில் கண்டால் அங்கு காரை நிறுத்தச் சொல்லுவார்.
டிரைவர் வரவில்லை என்று சொன்னாலும், ”வாங்க பரவாயில்லை பாஸ்… பில்லை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறி பாசமாக சாப்பிட அழைத்துச் செல்வார்.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே அவரது மொபைலுக்கு ஒரு அழைப்பு வரும். அதில் பேசியவுடன், ”எனது நண்பர் எமர்ஜென்சியில் இருக்கிறார்… உடனே பணம் அனுப்ப வேண்டும். ஜி பேவில் அனுப்புங்கள்… நான் கையில் தருகிறேன்” என்று அந்த வாடகை கார் ஓட்டுநர்களிடமே கேட்பார்.
கார் ஓட்டுநர் பணம் கொடுப்பதற்கு தயங்கினாலும், நிச்சயமாக கொடுத்துவிடுவேன் என்று அவர்களை நம்பவைத்து பணத்தை தனது ஜி பேவுக்கு டிரான்ஸ்வர் செய்துகொள்வார்.
பணம் வந்தவுடன், ’இருங்க ரெஸ்ட் ரூம் சென்று வருகிறேன்’ அல்லது ’தம் அடித்துவிட்டு வருகிறேன்’ என சொல்லிவிட்டு செல்லும் சஞ்சய் வர்மா திரும்பி வரவே மாட்டார். ஓட்டுநர் அனுப்பிய பணத்தை கொடுக்காமல் தப்பி விடுவார்.
ஏற்கெனவே பணத்தை இழந்தது கொடுமையென்றால், ஹோட்டலில் அவர் சாப்பிட்டதற்கும் ஓட்டுநர்தான் பணம் கட்டிவிட்டு வெளியே வரவேண்டிய மோசமான சூழ்நிலைக்கு உருவாக்கி விட்டு சென்று விடுவார் இந்த மோசடி பேர்வழி.
அந்த வகையில்தான் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மாலை 7.45 மணிக்கு சென்னை காவிரி மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி செல்ல வேண்டுமென்று சஞ்சய் வர்மா வாடகை காரை புக் செய்திருக்கிறார்.
புதுச்சேரியை சேர்ந்த கார் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் புக் செய்த நிலையில், பீம் குமார் என்ற ஓட்டுநர் காவிரி மருத்துவமனை அருகே சஞ்சய் வர்மாவை பிக்கப் செய்ய சென்றுள்ளார்.
போர்ட்டிக்கோவில் நின்று கொண்டிருந்த சஞ்சய் வர்மா அருகே சென்று ”சார் லக்கேஜ் இருக்கா? எடுத்து வைக்கணுமா? என கார் ஓட்டுநர் கேட்டிருக்கிறார்.
இதற்கு சஞ்சய் வர்மா, ”அடையாறில் இருக்கிறது. அங்கு போய் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூற கார் அடையாறை நோக்கிச் சென்றது.
அதன்படி அடையாறில் உள்ள “99 பார்” அருகே சென்றதும், வழக்கம் போல ஓட்டுநரிடம் வாங்க சாப்பிட போகலாம் என்று அழைத்திருக்கிறார்.
ஓட்டுநர் பீம் குமார் வர மறுத்தும் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சப்பாத்தி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது சஞ்சய்க்கு மொபைலில் ஒரு அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசி முடித்த பிறகு, ”என் நண்பர் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு காசு இல்லாமல் அங்கு தவித்துக்கொண்டிருக்கிறார். உடனே பணம் அனுப்ப வேண்டும், என்னிடம் ஜிபே, போன் பேவில் காசு இல்லை. கையில் தான் இருக்கிறது. நீங்கள் ஒரு 8000 ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள். நான் கையில் காசு தருகிறேன்’ என்று கேட்டிருக்கிறார் சஞ்சய் வர்மா.
ஆனால் பீம் குமார் பணம் கொடுக்க தயங்கிய நிலையில், கார் புக் செய்த டிராவல் ஏஜென்சிக்கு தொடர்புகொண்டு, ‘ஒரு எமெர்ஜென்சி, எனது நண்பருக்கு பணம் அனுப்ப வேண்டும், உங்களது ஓட்டுநரை பணம் அனுப்ப சொல்லுங்கள்… நான் கையில் கொடுத்துவிடுகிறேன்’ என்று கூறிக்கொண்டே, தன் பையில் இருந்து 500 ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்து பீம் குமாரிடம் எண்ணச் சொல்லியிருக்கிறார் சஞ்சய் வர்மா.
இதையடுத்து அந்த எஜென்சியில் இருந்து பேசியவர் பீம் குமாரிடம் போனை கொடுக்கச் சொல்லி, ”சஞ்சய் வர்மா கையில் காசு கொடுத்தாரா… அப்படி கொடுத்தால் ஜி பேவில் அனுப்பி விடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
ஏஜென்சியில் இருந்து சொல்லியதால் பீம் குமாரும், சஞ்சய் வர்மாவுக்கு 8000 ரூபாய் அனுப்பினார்.
பின்னர் சஞ்சய் வர்மா கையில் கொடுத்த பணத்தை எண்ணி கொண்டிருந்தார். அப்போது, ‘எவ்வளவு நேரம் தான் எண்ணுவீங்க.. ஏன் கஷ்டபடுறீங்க … கொடுங்க நானே எண்ணி தருகிறேன்’ என்று பீம் குமார் கையில் இருந்து பணத்தை பிடுங்கி எண்ணுவது போல் நடித்த சஞ்சய் வர்மா… ’இருங்க ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு வருகிறேன்’ என்று சொல்லி சென்றவர், நீண்ட நேரமாகியும் வரவே இல்லை. தன் வேலையை காட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டார்.
பிறகென்ன, காசையும் கொடுத்து ஏமாந்துவிட்டு, சஞ்சய் வர்மா சாப்பிட்டதற்கு ரூ.900 பில்லை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார் பீம் குமார்.
இதேபோன்று பாண்டிச்சேரி பழனியிடமும் 2022 ஆம் ஆண்டு 10 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிவிட்டு தப்பியிருக்கிறார் சஞ்சய் வர்மா.
இவர் மீது பள்ளிக்கரணை உட்பட பல்வேறு காவல் நிலையத்திலும் ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவரை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.
ஒரே நம்பரில் இருந்து கார் புக் செய்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் ஒவ்வொரு முறையும் ஒரு நம்பரை பயன்படுத்தி கார் புக் செய்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார் சஞ்சய் வர்மா.
ஓட்டுநர்களிடம் பணத்தை வாங்கிவிட்டு சென்ற பிறகு அவர் நீண்ட நேரம் வரவில்லை என்றால் அவரது எண்ணுக்கு தொடர்பு கொள்வோம். ஆனால் போன் சுவிட்ச் ஆப் என வரும் என்று ஓட்டுநர்கள் புலம்புகிறார்கள்.
மேலும் சஞ்சய் வர்மா கள்ள நோட்டுகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டும் ஒட்டுநர்கள் அவரை போலீசார் தேடி பிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
யூடியூப்பில் வியூஸ் வராததால் விபரீதம்… யுடியூபர் தம்பதி எடுத்த முடிவு!
தீபாவளி லீவுக்கு போறீங்களா? இன்று இரவு 3 சிறப்பு ரயில்கள் இருக்கு! மறந்துடாதீங்க!