போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13 வது நாளாக இன்று (ஆகஸ்ட் 13) சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று தேன்மொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறி தூய்மை பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது.
அதேசமயம் வேறு இடத்தில் போராட்டம் நடத்தலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் இன்று தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் தெரிவித்துவிட்டதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இது தொடர்பாக போராட்ட குழுவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்கள் போராட்டம் தொடர்கிறது. முதல்வர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அமைதியான முறையில் ஓரமாக உட்கார்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள பெண் தொழிலாளர்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் சென்னை மாநகராட்சி ஆணையர், அமைச்சர், மேயர், இங்கு வந்துள்ள போலீஸ் அதிகாரிகள் தான் பொறுப்பு” என்று கூறினர்
இந்த சூழலில் ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த மாநகராட்சி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி அலுவலகம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏழு பேருந்துகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளன. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம் என்பதால் ரிப்பன் மாளிகை முன்பு பதற்றமான சூழல் நிலவுகிறது.
தூய்மை பணியாளர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வெளி ஆட்கள் போராட்டத்தில் இருந்து வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதுபோன்று தூய்மை பணியாளர்களை சந்திக்க பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கிளம்பினார். ஆனால் அவரையும் வீட்டிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
.