ADVERTISEMENT

மும்பையில் பரபரப்பு: 17 குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்த வெப் சீரிஸ் இயக்குநர் போலீசாரால் சுட்டுக்கொலை 

Published On:

| By Mathi

Mumbai Crime

மும்பையில் வெப் சீரிஸ் ஆடிஷன் என்ற போர்வையில் 17 குழந்தைகளை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த ரோஹித் ஆர்யா என்ற இயக்குநர், காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மும்பை பவாய் பகுதியில் உள்ள ஆர்.ஏ. ஸ்டுடியோவில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியது. 8 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், வெப் சீரிஸ் ஆடிஷனில் பங்கேற்பதற்காக ரோஹித் ஆர்யாவால் வரவழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடக சேனல் உரிமையாளர் மற்றும் தன்னார்வ ஆர்வலர் என்று தன்னை அடையாளம் காட்டிய ரோஹித் ஆர்யா, இரண்டு நாட்களாக ஆடிஷன்கள் நடத்தினார். பின்னர் திடீரென 17 குழந்தைகளையும் இரண்டு பெரியவர்களையும் ஸ்டுடியோவில் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தார்.

ADVERTISEMENT

பணயக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், ரோஹித் ஆர்யா ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தான் சில கேள்விகளைக் கேட்க விரும்புவதாகவும், சிலரிடம் பேச விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், தான் தற்கொலை செய்துகொள்ள விரும்பவில்லை என்றும், ஆனால் மகாராஷ்டிரா முன்னாள் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கருடன் பேச வேண்டும் என்றும் கோரினார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரோஹித் ஆர்யாவை சரணடையுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர் காவல்துறையினரை நோக்கி ஏர் கன் மூலம் சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார், பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ரோஹித் ஆர்யாவின் மார்பில் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அருகிலுள்ள பாலாசாகேப் தாக்கரே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மாலை 5:15 மணியளவில் உயிரிழந்தார்.

ADVERTISEMENT

காவல்துறையின் நடவடிக்கையால், பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 17 குழந்தைகளும், இரண்டு பெரியவர்களும் எந்தவித காயமும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மும்பை குற்றப்பிரிவு விரிவான விசாரணை நடத்தி வருகிறது. வெப் சீரிஸ் மோகத்தின் பின்னணியில் அரங்கேறிய இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வு, மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share