கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று நவம்பர் 16-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. கார்த்திகை 1-ந் தேதியான இன்று சபரிமலையில் கட்டுக்கடங்காத ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சாமி தரிசனம் செய்வர். நடப்பாண்டு மண்டலபூஜை- மகரபூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.
சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு (TDB) பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும், சிறப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. நவம்பர் 17-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் சபரிமலை ஐயப்பன் கோவில் சுமார் 18 மணிநேரம் திறந்திருக்கும். பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்வதை உறுதிசெய்ய, தினசரி 90,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. இதில், 70,000 பேர் ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும், மீதமுள்ள 20,000 பேர் நேரடி முன்பதிவு மூலமாகவும் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை முன்பதிவு கடந்த ஆண்டைவிடப் பலமடங்கு அதிகரித்துள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் மட்டும் 22 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த முறை 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தக் கடுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எனத் தனி வரிசைகள் அமைக்கப்பட்டு, சிரமமின்றி தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
அன்னதான மண்டபங்களில் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலவச பிசியோதெரபி மையம் மற்றும் ஆஃப்-ரோடு ஆம்புலன்ஸ் சேவை போன்ற சிறப்பு மருத்துவ வசதிகள் பக்தர்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளன.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக 18,741 காவல்துறை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க, கோவில் நடை வழக்கமான நேரத்தை விட நீண்ட நேரம் திறந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், தெற்கு ரயில்வே கூடுதல் சிறப்பு ரயில்களையும் இயக்குகிறது.
மேலும் பம்பை நதியில் குளிப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- பக்தர்கள் குளித்த பின் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசிச் செல்வதற்கு தடை
- சோப்பு, ஷாம்பூ போன்ற ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி குளிக்க தடை
- பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட 6 வாயில்களில் மட்டுமே குளிக்க முடியும்.
- ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் இந்த பாதைகள் மூடப்படும்
- பம்பை நதியில் பாக்டீரியாக்களின் (கோலிஃபார்ம்) அளவு அதிகரித்துள்ளதாகவும், இது காலரா, டைபாய்டு போன்ற நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது; பக்தர்கள் நீராடும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
