“2026 ஆரம்பிச்சாச்சு… ரயில்வேல பெரிய வேலைவாய்ப்பு வரும், செட்டில் ஆகிடலாம்”னு கனவு கண்டுட்டு இருந்த 10ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு ஒரு சின்ன சறுக்கல். இந்திய ரயில்வேயில் 22,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ‘குரூப்-டி’ (Group D) அறிவிப்பு இன்று (ஜனவரி 20) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தேர்வு வாரியம் (RRB) வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட்டின்படி, இந்த அறிவிப்பு வெளியாகும் தேதி தள்ளிப்போயிருக்கிறது.
ஏன் இந்தத் தாமதம்? ரயில்வே நிர்வாகம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகச் சொல்லவில்லை என்றாலும், நிர்வாக ரீதியான காரணங்களுக்காகவும், காலிப்பணியிடங்களை மீண்டும் சரிபார்ப்பதற்காகவும் (Vacancy Review) இந்தத் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, “ஜனவரி மாதத்திலேயே அப்ளிகேஷன் தொடங்கும்” என்று ரயில்வே காலண்டரில் சொல்லப்பட்டிருந்தது. அதை நம்பிப் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தயாராக இருந்த நிலையில், இந்தச் செய்தி கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எப்போது வரும்? கவலைப்பட வேண்டாம் பாஸ்! தாமதமானாலும் கண்டிப்பாக அறிவிப்பு வரும்.
- புதிய தேதி: வரும் ஜனவரி 23, 2026ஆம் தேதிக்குப் பிறகு முழுமையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பணியிடங்கள்: சுமார் 22,000 ‘லெவல்-1’ (Level-1) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. டிராக் மெயின்டெய்னர், பாயிண்ட்ஸ்மேன் போன்ற வேலைகள் இதில் அடங்கும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ஐடிஐ (ITI) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். (சில தொழில்நுட்பப் பணிகளுக்கு ஐடிஐ கட்டாயம்).
- வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை. (ஓபிசி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குத் தளர்வு உண்டு).
நோட்டிபிகேஷன் தள்ளிப்போனதை நினைச்சுக் கவலைப்படாதீங்க. இதை ஒரு பாசிட்டிவ் விஷயமா எடுத்துக்குங்க. உங்களுக்குப் படிக்க இன்னும் கொஞ்ச நாள் எக்ஸ்ட்ரா டைம் கிடைச்சிருக்கு. ரயில்வே குரூப்-டி தேர்வை ஈஸியா பாஸ் பண்ணலாம். ஆனா, சயின்ஸ் (Science) பாடத்துல கொஞ்சம் வீக்னா, இப்பவே படிக்க ஆரம்பிங்க. லட்சக்கணக்கில் போட்டி இருக்கும்… ஒரு மார்க்ல வேலையை மிஸ் பண்ணிடாதீங்க!
