ADVERTISEMENT

கோவையில் அட்டகாசம் செய்த ரோலக்ஸ் யானை பிடிபட்டது!

Published On:

| By Pandeeswari Gurusamy

Rolex elephant caught on rampage in Coimbatore

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதிகளில் உள்ள காட்டு யானைகள், உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக அவ்வப்போது அருகிலுள்ள கிராமங்களுக்குள் நுழைகின்றன. இதனால் யானை–மனித மோதல் அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தொண்டாமுத்தூர், நரசிபுரம் வட்டாரங்களில் “ரோலக்ஸ்” என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ஆண் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்தது. இந்த யானை அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்தி, சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி வந்தது.

ADVERTISEMENT

இதனால் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மன் மற்றும் முத்து என்ற இரண்டு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, ரோலக்ஸ் யானைக்கு மயக்க மருந்து செலுத்தி பிடிக்க அதிகாரிகள் முயற்சித்தனர்.

கடந்த மாதம் வன மருத்துவர்கள் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயன்றபோது, மருத்துவர் விஜயராகவனை அந்த யானை தாக்கியது. இதையடுத்து யானையை பிடிக்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அதில் நரசிம்மன், முத்து ஆகிய இரண்டு யானைகளுக்கும் மதம் பிடித்ததால், கடந்த 10-ம் தேதி டாப்சிலிப்பிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து சில தினங்களுக்கு முன் டாப்சிலிப்பிலிருந்து சின்னத்தம்பி, கபில்தேவ் என இரண்டு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, ரோலக்ஸ் யானையை பிடிக்கும் முயற்சி மீண்டும் தொடங்கப்பட்டது. மேலும் நேற்றிரவு நீலகிரி மாவட்டம் முதுமலையிலிருந்து வசீம் மற்றும் பொம்மன் என்ற இரண்டு கும்கி யானைகளும் அழைத்து வரப்பட்டன.

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலையில் ரோலக்ஸ் காட்டு யானை தொண்டாமுத்தூர் அருகே உள்ள இச்சிக்குழி பகுதியில் நிற்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

முதன்மை தலைமை வன பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர்கள் கலைவாணன் தலைமையிலான குழு யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டது. யானைக்கு மயக்க ஊசி செலுத்தியதும், ரோலக்ஸ் காட்டு யானை நின்றுவிட்டது. இதையடுத்து வனத்துறையினர் கபில்தேவ், வசீம், பொம்மன் ஆகிய 3 கும்கி யானைகளின் உதவியுடன் ரோலக்ஸ் யானையை கயிறு கட்டி லாரியில் ஏற்றினர்.

பிடிக்கப்பட்ட யானை பொள்ளாச்சியில் உள்ள டாப்சிலிப் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளது. மக்களை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் யானை பிடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share