ADVERTISEMENT

‘கோல்ட்ரிப்’ குடித்து குழந்தைகள் பலி… ஈபிஎஸ் கொண்டு வந்த தீர்மானம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Published On:

| By Kavi

ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் மத்திய அரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்த கோல்ரிப் இருமல் மருந்தை குடித்து வடமாநிலத்தில் 20க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 55-ன்கீழ், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ரா.காமராஜ், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘ கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், மத்தியப் பிரதேச மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடம் இருந்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு ஒரு கடிதம் வந்தது.

ADVERTISEMENT

அக்கடிதத்தில். 04.09.2025 முதல் மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்திற்கு தொடர்புடையதாக கருதப்படும் மருந்து, கோல்ட்ரிஃப் சிரப் (பாராசிட்டமால், ஃபீனைல்ஃப்ரைன் ஹைட்ரோகுளோரைடு, குளோரிபெனிரமைன் மெலேட் சிரப்) குறித்த விவரம் பெறப்பட்டது.

இது தொடர்பாக, 01.10.2025 விடுமுறை தினமாக இருந்தாலும், அன்றைய தினமே சுமார் 4.00 மணியளவில், துணை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் உத்தரவின் பேரில், முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் (Senior Drugs Inspector) தலைமையிலான குழு ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டது.

ADVERTISEMENT

மேலும் 01.10.2025 அன்றே தமிழ்நாடு முழுவதும் சந்தேகத்திற்குரிய கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) விற்பனை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டது.

அக்குழு மேற்கொண்ட தொடர் ஆய்வில் மருந்துகள் விதி1945-இன்கீழ் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, சர்ச்சைக்குரிய மருந்தான கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) Batch No: SR-13 உள்ளிட்ட 5 மருந்துகள் அவசர பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டு அரசு மருந்துகள் பகுப்பாய்வு கூடம், சென்னைக்கு அனுப்பப்பட்டது.

பகுப்பாய்வின் முடிவில் டைஎத்திலீன் கிளைகால் (Diethylene Glycol, DEG) என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள், கோல்ட்ரிஃப் சிரப்பில் (48.6% w/v) கண்டறியப்பட்டது.

மேலும், மேற்கூறிய நிறுவனத்திலிருந்து, ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிஃப் மருந்து விநியோகிக்கப்பட்ட தகவல் கிடைக்கப்பட்ட விபரம் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடர்பான தகவல்கள், 02.10.2025 அன்றே மேல்நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது.

இந்த சர்ச்சைக்குரிய மருந்தை பற்றிய விவரங்கள் எல்லா மருந்துகள் ஆய்வாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, 02.10.2025 அன்று கோல்ட்ரிஃப் சிரப் -2- முடக்கம் செய்யப்பட்டதும் அல்லாமல் ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் தயாரித்த அனைத்து மருந்துகளும் முடக்கம் செய்யப்பட்டன.

அதோடு, பொதுநலன் கருதி மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்நிறுவனம் தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் உடனடியாக மூடப்பட்டது. மேலும் தொடர் நடவடிக்கையாக ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து உரிமங்கள் முழுவதுமாக ஏன் ரத்து செய்யப்படக்கூடாது (Cancellation) என விளக்கம் கேட்டு 03.10.2025 அன்றே குறிப்பாணையும் அனுப்பப்பட்டது.

மேலும் 03.10.2025, அன்றே மருந்து குறித்த எச்சரிக்கையும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக Coldrif Syrup என்ற மருந்தின் ஆய்வு அறிக்கையில் கண்டறியப்பட்ட Diethylene Glycol 48.6% நச்சு பொருள் இருந்ததன் காரணமாக அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்ற நடவடிக்கை எடுத்து அந்நிறுவன உரிமையாளர் தலைமறைவானதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்காக குற்ற குறிப்பாணை) 07.10.2025 அன்று மருந்துகள் ஆய்வாளர் மூலம் அந்நிறுவனத்தின் வெளிபுறமும், உரிமையாளரின் வீட்டின் கதவிலும் ஒட்டப்பட்டது.

மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்களிடம் இருந்த கோல்ட்ரிஃப் சிரப்பின் மொத்த இருப்பும் 08.10.2025 அன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் மீது குற்றவியல் (Criminal) நடவடிக்கை மேற்கொள்ள C-2 சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் 08.10.2025 அன்று புகார் கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு காவல் துறையின் உதவியுடன் மத்திய பிரதேச சிறப்பு புலனாய்வுப் பிரிவு 09.10.2025 அன்று அதிகாலை சென்னை அசோக் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மேலும், அந்நிறுவனத்தில் 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் ஆய்வு முறையாக மேற்கொள்ளப்பட்டு இந்நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டில், உரிய ஆய்வு மேற்கொள்ளாத காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டு, துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு முதன்முதலாக 27.10.2011 அன்று உரிமம் அளிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 5 முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநிலத்திலுள்ள 397 மருந்து உற்பத்தி நிறுவனங்களில், திரவ நிலை மருந்து (Syrup) தயாரிக்கும் 50 மருந்து நிறுவனங்களில் கடந்த ஒரு வாரத்தில் முழுஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் மேலும் 52 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது முழுஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இனி வரும் காலங்களில் மருந்து உற்பத்தியாளர்களை தொடர்ந்து கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன .

ஒருமுறை கூட்டாய்வு செய்வது ஒவ்வொரு மருந்து நிறுவனத்திலும் மத்திய அரசு மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலர் மூன்று ஆண்டுகளுக்கு கட்டாயமாக்கப்பட்டிருந்தும், இந்நிறுவனம் தொடங்கிய 2011-ஆம் ஆண்டு முதல் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அலுவலரால் இந்நிறுவனம் ஒருமுறை கூட ஆய்வு செய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share