விநாயகர் சதுர்த்திக்கு ரிவால்வர் ரீட்டா ‘ரிலீஸ்’..!

Published On:

| By uthay Padagalingam

revolver rita release at vinayagar chathurthi

’எத்தனை நாள்தான் ஹீரோவை சுத்தி சுத்தி வந்து டூயட் பாடுறது’ என்ற ஏக்கம் எல்லா நாயகிகளுக்கும் இருக்கும். அதனைத் தீர்த்து வைப்பது போல, ‘நாயகியை மையமாகக் கொண்ட கதைகள்’ சிலருக்கு வாய்க்கின்றன. அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள், தொண்ணூறுகளின் தொடக்கம் வரை அப்படிப்பட்ட கதைகளால் அடையாளம் பெற்ற நாயகிகளின் எண்ணிக்கை கணிசம். அவர்களே புதிதாக நடிக்க வருபவர்களுக்கான முன்னோடிகளாகத் திகழ்கின்றன. அதற்கு விதை போட்டவை, அப்படிப்பட்ட படங்களே. revolver rita release at vinayagar chathurthi

தற்காலத்தில் ஜோதிகா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், டாப்ஸி பன்னு என்று ஒரு சில நாயகிகளே அது போன்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கின்றனர். அதற்கேற்பத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் அவர்களைத் தேடிச் செல்கின்றனர்.

திருமணத்திற்குப் பிறகு நடிக்க வந்த காரணத்தால், அது போன்ற கதைகளுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கினார் ஜோதிகா. ‘அறம்’ தந்த வெற்றி நயனை அந்தப் பாதையில் பயணிக்கச் செய்தது. ஐஸ்வர்யா, டாப்ஸிக்கு அது போன்ற படங்களே அடையாளத்தைத் தந்தன.

அந்த வரிசையில், ‘ரகு தாத்தா’வைத் தனக்கானதாகத் தேர்ந்தெடுத்து நடித்தார் கீர்த்தி சுரேஷ். அந்த படம் அவ்வளவாகக் கைகொடுக்கவில்லை.

இந்த நிலையில், நீண்ட நாட்களாகக் காத்திருப்பில் இருக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ இப்போது ரிலீஸுக்கு தயாராகியிருக்கிறது.

வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த, ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தை இயக்கிய ஜே.கே.சந்துரு இதனை இயக்கியிருக்கிறார்.

சொன்னா புரியாது, சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ், தமிழ்படம் 2, மாநாடு, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படங்களின் எழுத்தாக்கத்தில் இவர் பங்களித்திருக்கிறார்.

ராதிகா, சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண், சுரேஷ் சக்ரவர்த்தி, கதிர், செண்ட்ராயன், அகஸ்டின், ராமச்சந்திரன் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, வரும் ஆகஸ்ட் 27 அன்று ’ரிவால்வர் ரீட்டா’ வெளியாகிறது. ஏற்கனவே ஒரு டீசர் வெளியான நிலையில், இதற்கான அறிவிப்பு டீசர் தற்போது வந்திருக்கிறது.

கோலமாவு கோகிலா பாணியில் நாயகியும் அவரைச் சார்ந்தவர்களும் ஒரு கேங்க்ஸ்டர் கும்பலிடம் மாட்டுகிற கதையைக் கொண்டிருப்பது இதில் தெரிய வருகிறது.

‘ப்ளாக் ஹ்யூமர்’ என்ற பெயரில் அவலங்களை நகைச்சுவையாக்க முயற்சித்திருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தியேட்டரில் உட்கார்ந்து முழுதாகப் பார்க்கையில் தான், ‘அவற்றின் சிரிப்பு தரம்’ தெரிய வரும்.

இன்னும் சில நாட்களில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர், இதன் உள்ளடக்கத்தைக் கோடு கிழித்துக் காண்பிக்கக் கூடும். அதற்குள், படத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் தரும் பேட்டிகளும் மேடைப்பேச்சுகளும் நமக்குள் ஒரு பிம்பத்தை உருவாக்கிவிடும்.

என்ன, திரையில் நாம் பெறும் அனுபவத்தோடு பொருந்தும் வகையில் அவையனைத்தும் இருக்குமாறு படக்குழு பார்த்துக்கொள்ள வேண்டும். ‘ரிவால்வர் ரீட்டா’ அதற்கேற்ற அனைத்தையும் ஆவண செய்தால் நல்லது..!

Revolver Rita - Anouncement | Keerthy Suresh |Passion Studios |The Route | JK.Chandru | Sean Roldan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share