சினிமா தயாரிப்பாளர் சங்கம் போட மறந்த தீர்மானங்கள்!

Published On:

| By Minnambalam Desk

முதலில் தயாரிப்பாளர் சங்கம் போட்டிருக்கும் முக்கியமான தீர்மானங்கள் சில…

  1. நடிகர்கள் , இயக்குனர்கள், முன்னணித் தொழில்நுட்பக் கலைஞர்கள் வெப் சீரிஸ்களில் அதிகம் நடிப்பதால் மக்கள் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவதன் கட்டாயம் குறைந்து விட்டது . எனவே இனி அப்படி நடிக்கும் நடிகர்கள் , இயக்குனர்கள் , தொழில் நுட்பக் கலைஞர்கள் இடம்பெறும் படங்களுக்கு சம்மந்தப்பட்ட சங்கங்கள் ஒத்துழைப்புத் தரக் கூடாது. திரையரங்குகள் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது (நடிகைகளுக்கு மட்டும் விதி விலக்கு?)
  2. நடிகர்கள் , இயக்குனர்கள் , முன்னணித் தொழில்நுட்பக் கலைஞர்கள், இனி படத்தில் நடித்து விட்டு படம் வெளியாகி வரும் லாபத்தில், தங்கள் பங்கை வாங்கிக் கொள்ள வேண்டும். (ஓடா விட்டால் அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு பணம் தர வேண்டுமா, எப்படி? ஒரு தயாரிப்பாளர் ஒழுங்கான கதையை தேர்வு செய்யத் தெரியாமல், சரியான கலைஞர்களைப் போடாமல் படம் எடுத்து அது ஓடவில்லை என்றால் உழைத்தவர்கள் கதி? லாபத்தில் பங்கு என்பது திரையரங்கு லாபம் மட்டும்தானா? இல்லை எக்காலத்துக்குமான டிஜிட்டல் ரைட்ஸ் இவற்றிலும் தலைமுறை தலைமுறையாக பங்கு போகுமா?)
  3. ஆன் லைன் டிக்கெட் புக்கிங் எனப்படும் இணைய வழி டிக்கெட் புக்கிங்கை அரசே ஏற்று நடத்தவேண்டும் (இது சரி)
  4. அனைத்து திரையரங்குகளும் கணினி மயமாக்கப்பட்டு , கொடுக்கப்படும் டிக்கெட்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு , அதை படத்தின் தயாரிப்பளர்களும் பார்க்கும்படி சென்ட்ரலைஸ்டு சர்வர் உருவாக்க வேண்டும் (மிகச் சரி . இதனால் உண்மையான வசூல் தெரியாமல் தயாரிப்பாளர் ஏமாற்றப்படுவது மாறும். பிலடப் ஹீரோக்களின் உண்மையான வசூல் சக்தியும் புரியும்.)
  5. பெரிய நடிகர்களின் படங்கள் எட்டு வாரம் கழித்தும் அடுத்த கட்ட நடிகர்களின் படங்கள் ஆறு வாரம் கழித்தும் சிறு முதலீட்டுப் படங்கள் நான்கு வாரங்கள் கழித்தும்தான் ஓ டி டி யில் வெளியிட வேண்டும் (யார் யார் பெரிய நடிகர் , யார் யார் அடுத்தகட்ட நடிகர்கள் என்று முடிவு செய்யும் அளவுகோல் என்ன? சிறு முதலீட்டுப் படங்கள் என்றால் தயாரிப்புச் செலவு எவ்வளவு தொகைக்குள்?)
  6. எந்த ஒரு தனியார் அமைப்பும் விருது வழங்கும் விழா அல்லது இசை நிகழ்ச்சி நடத்தினால் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் அனுமதி பெற வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் ( எதன் அடிப்படையில் அனுமதி கொடுப்பார்கள் . அதற்கு சம்மந்தப்பட்ட அமைப்புகள் என்னென்ன தர வேண்டும்? தொண்டு நிறுவனங்கள் என்றால் எப்படி அனுமதி கிடைக்கும்?)

6.விமர்சனம் என்ற பெயரில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் யூ டியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். (படத்தின் குறைகளை நேரமியோடு சொல்வது என்பது தரம் தாழ்த்துதல் இல்லையே?)

ADVERTISEMENT

-என்று அந்தத் தீர்மானங்கள் போகின்றன . (அடைப்புக் குறிக்குள் உள்ளவை படிக்கும்போது தோன்றிய கேள்விகள்)

அவர்கள் போட மறந்த தீர்மானங்களை நாம் நினைவூட்டுவோம் . அதெல்லாம் சொன்னால் கண்டிப்பாகப் போடும் அளவுக்கு அன்பு உள்ளங்களால் நிறைந்தது நமது தயாரிப்பாளர் சங்கம்.

ADVERTISEMENT
  1. ஒரு படத்தின் கலைஞர்களை திறமையின் அடிப்படையிலேயே தயாரிப்பாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் .
  2. எது நல்ல கதை எப்படிப்பட்ட திரைக்கதை ஓடும் என்று சரியாக முடிவு செய்யும் திறமையை மற்ற மாநிலத் தயாரிப்பாளர்கள் அளவுக்காவது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் .
  3. பணம் இருக்கிறது என்பதாலேயே படம் எடுக்க வந்து விடக்கூடாது. பணம் எவ்வளவு இருந்தாலும் ஒரு திரைப்படக் குழுவில் பணியாற்றி எப்படி வீண் செலவுகளைக் குறைப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டும் . அல்லது தெரிந்த ஒருவரை வைத்துக் கொள்ள வேண்டும் .

4.ஒரு படத்தின் படப்பிடிப்போ எடுக்கும் காட்சிகளோ (உண்மையிலேயே )தவறாகப் போகிறது என்று தெரிந்தால் (மட்டும்) அதைச் சரி செய்யச் சொல்லும் திறமையை , ஏ வி மெய்யப்பச் செட்டியார், எல் வி பிரசாத், நாகிரெட்டி போல வளர்த்துக் கொள்ள வேண்டும். படத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஒரு முக்கிய எல்லை அளவுக்காவது படைப்பாளிக்கான படைப்பு மற்றும் கருத்து உரிமையை தயாரிப்பாளர்கள் மதிக்க வேண்டும்.

5 பெரிய இயக்குனர்கள், பெரிய நடிகர், பெரிய நடிகை, இவர்களின் உதவியாளர்களுக்கு எல்லாம் கண் மூடித்தனமாக காசைக் கொட்டி விட்டு, தொழிலாளர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பதைக் கைவிடவேண்டும். சில நடிக நடிகைகளின் உதவியாளர்களுக்கு கொட்டிக் கொடுக்கும் தொகையில் ஒரு நல்ல கதை கொண்ட படமே எடுத்து விட முடியும். கதை திரைக்கதையை சரியாகத் தேர்ந்தெடுக்கும் திறன் இருந்தால் எல்லா பெரிய நடிக நடிகையர் டெக்னீசியன்களும் தானாக வழிக்கு வருவார்கள் . (கட்டாயப்படுத்தி) சம்பளத்தைக் குறைப்போம் என்று, புகை போட்டுப் பழுக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்த விலைக்கு எல்லா பழங்களும் தானாகக் கனியும்.

ADVERTISEMENT

இவை எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு செய்யத் தெரிந்தால் எடுக்கும் படம் நன்றாக ஓடும். வெப் சீரிஸில் நடிக்க வேண்டிய அவசியம் பலருக்கும் இருக்காது .

அப்போதுதான் படங்கள் வெற்றி பெற்று , சொன்னபடி ரெவின்யூ ஷேரிங்கை தயாரிப்பாளர்கள் எல்லோருக்கும் கொடுக்க முடியும் .

  1. அநியாயமாக பார்கிங் கட்டணம்,தியேட்டரில் தரமற்ற உணவு களை வழங்கும் தியேட்டர்களுக்கு படம் கொடுக்க மாட்டோம் .ஏனெனில் திரைப்படத் துறையை வாழ வைக்கும் மக்களின் ஆரோக்கியமும் எங்கள் தயாரிப்பு சங்கத்துக்கு முக்கியம் . எங்களுக்கு பணம் தரும் மக்கள் நன்றாக இருந்தால்தான் நாங்களும் நன்றாக இருக்க முடியும்.
  • இந்த தீர்மானங்களையும் மறக்காமல் போடும்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பணிவன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.

ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share