சட்டப்பிரிவு 370 ரத்து : மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

Published On:

| By Kavi

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது சரியானது என்று வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது.  2019 ஆம் ஆண்டு இந்த சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.

தொடர்ந்து காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

370ஆவது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு  2023, டிசம்பர் 11ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி . ஒய் சந்திர சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

“ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தபோதே அதற்கான தனி இறையாண்மை காலாவதியாகிவிட்டது. அதற்கென சிறப்பு அந்தஸ்து எதுவும் கிடையாது” என்று கூறி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்ய காந்த் மற்றும் ஏஎஸ் போபண்ணா அமர்வு, உச்ச நீதிமன்ற விதிகள் 2013ன் ஆணை XLVII விதி 1ன் கீழ் மறுஆய்வு செய்ய எந்த தேவையும் இல்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மே 1ஆம் தேதி இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். ஆனால் இந்த உத்தரவின் நகல் உச்ச நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று பதிவேற்றப்பட்டதால், மறுஆய்வு மனு தள்ளுபடி செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மணிப்பூரில் அமைதி எப்போது?: சென்னையில் ஆதரவு கூட்டம்!

வேலைவாய்ப்பு : சென்னை துறைமுகத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share