கடந்த மே 3, 2023 தொடங்கி ஓராண்டு காலமாக மணிப்பூரில் குக்கி-சோ பழங்குடியின மக்களுக்கும் மெய்தி இன மக்களுக்கும் இடையே நடந்து வரும் வன்முறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மணிப்பூர் வன்முறை ஓராண்டு காலமாக நீடிக்கும் நிலையில் அதை கண்டித்து, கடந்த மே 11 2024 அன்று எழுத்தாளரும், ஊடகவியலாளருமான ஜெயராணி தலைமையில், ‘மணிப்பூரில் இனரீதியான வன்முறையை நிறுத்துவதற்கான அழைப்பு’ என்ற பெயரில் திராவிடர் கழகம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய கிறித்தவ பெண்கள் இயக்கம், பூவுலகின் நண்பர்கள் மற்றும் நீலம் பண்பாட்டு மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு சார்பாக மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டி ஒற்றுமைக் கூட்டத்தை சென்னையில் எழும்பூரில் நடத்தியது.
100 ஆண்டுகளாகியும் தேச உணர்வு இல்லை
தொடக்க உரையில் பத்திரிகையாளர் ஜெயராணி அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசித்து, :இந்த ஒரு பக்கத்தில் உள்ள கூறுகளை இந்தியர்களாகிய நாம் மதித்து நடந்தாலே மணிப்பூர் மாதிரியான கொடுமைகள் நடக்காது. 1929 ஆம் ஆண்டு சைமன் கமிஷனிடம் கொடுத்த அறிக்கையில அண்ணல் அம்பேத்கர் ‘’இம்மக்களுக்கு தாம் ஒரு தேசம் என்ற (sense of nationality யை) தேசிய உணர்வை உருவாக்குவது தான் இத்தருணத்தின் முக்கியமானத் தேவை. அதாவது முதலில் இந்தியர்கள் அப்புறம் தான் இந்து, முஸ்லீம் கிறித்தவர், இதெல்லாம்னு இல்லாம ஒவ்வொருவரும் முதலாகவும் கடைசியாகவும் தாமொரு இந்தியராகவே உணர வேண்டும். அப்படியொரு நிலையை உருவாக்குவதுதான் நமது முதன்மைப் பணி’’ என உறுதியாக சொல்கிறார்.
ஆனால் நூறாண்டுகளாகியும் நம்மால் அப்படியொரு தேச உணர்வை உருவாக்க முடியவில்லை என்பதுதான் சாதி, மத, இன ரீதியான அடையாளங்களை இந்தியர்கள் முன்னிறுத்தவும் அதற்காக சண்டை போடவும் காரணம்’’ என்று குறிப்பிட்டார்.
மிகப்பெரிய தோல்வி
தொடர்ந்து பேசிய மணிப்பூரைச் சேர்ந்த ஊடகவியலாளர் மேக்பீஸ் சிட்லூ, “அங்கு நடக்கும் வன்முறைப் போட்டியைத் தான் மிகப் பெரியத் தோல்வியாகக் கருதுகிறேன். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே பொறுப்பேற்க வேண்டும். அவை மணிப்பூரில் நடக்கும் இனரீதியான வன்முறையை கட்டுப்படுத்த முயலவில்லை. மத்திய அரசு இதில் தலையிட்டிருந்தால் கண்டிப்பாக வன்முறை இவ்வளவு காலம் நீடித்திருக்காது. பா.ஜ.க அங்கே புதிய பிரச்சனைகளை உருவாக்கவில்லை. ஆனால் ஏற்கனவே இருந்த இனப் பிரிவினை, சாதிய மேலாதிக்கம், இஸ்லாமிய வெறுப்பு ஆகியவற்றை வைத்து அரசியல் செய்து ஆதாயம் தேடுகிறது.
போதை வர்த்தகம், போதைக் கடத்தல்காரர்களால் உருவாகும் பயங்கரவாதம், பாப்பி சாகுபடி போன்றவற்றில் எல்லோருக்குமே பங்கிருக்கிறது. ஆனால் பழியை ஒரு சமூகத்தின் மீது மட்டுமே போடுவது தான் பிரச்சனை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மெய்தி இனத்தவரின் பள்ளத்தாக்கு பகுதியில் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் மலைப் பகுதிகளில் அமலில் இருக்கிறது. இத்தனைக்கும் பள்ளத்தாக்கில் மக்கள் வெளிப்படையாக ஆயுதங்களோடும் துப்பாக்கிகளோடும் சுற்றுகின்றனர்.
பா.ஜ.கவின் இந்து ராஜ்ஜிய அரசியல் என்பது ஆதிக்க சாதியினரை ஆதரித்து, சிறுபான்மையினரை ஒடுக்குவதாகும். கல்வி மற்றும் சமூகப் பொருளாதார அதிகாரம் ஆகியவற்றில் அதிக இடங்களைப் பெற்றுள்ள மெய்தி பெரும்பான்மை மக்களின் கோரிக்கைகள் சிறுபான்மையினரான பழங்குடியினருக்கு மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன’’ என்று குறிப்பிட்டவர், அகதிகளாக வெளியேறும் மக்களின் நிலை குறித்து கவலையோடு விவரித்தார்.
வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு
திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழ. அருள்மொழி, “இந்தியாவில் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டே இருக்கிற ஒரு சின்ன மாநிலம் மணிப்பூர். உலகம் முழுவதும் அடிக்கிற வலதுசாரி அலை என்பது பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து, சராசரி மனிதன் கூட இது அப்படிதான் நடக்கும் என்ற எண்ண ஓட்டத்தோடு கடந்து போக வைக்கிறது. மணிப்பூருக்கு என்றே பல பிரச்சனைகள் இருக்கிறது. ஆயுதப்படைக்கு வழங்கப்பட்ட கூடுதல் அதிகார சட்டத்தை பயன்படுத்தி, எளிய மக்களுடைய வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டன. 2000 ஆம் ஆண்டு தொடங்கி ஆயுதப்படை சிறப்புச் சட்டத்திற்கு எதிராக இரோம் ஷர்மிளா கிட்டத்தட்ட 16 ஆண்டுகால பட்டினிப் போராட்டம் நடத்தினார்.
இதைத் தவிர நடக்கிற மனித உரிமை மீறல்கள், பெண்கள் மீது நடத்தப்படுகிற பாலியல் வன்முறைகள், இவற்றையெல்லாம் எதிர்த்து குரல் கொடுத்தால் அவர்கள் தீவிரவாதிகளாக காட்டப்பட்ட நிலை, அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால் அது என்கவுண்டர் என்கிற அளவோடு முடிந்து போகும் நிலை என்று இவற்றையெல்லாம் ஏற்கனவே சந்தித்து கொண்டிருக்கிற பகுதிதான் மணிப்பூர். இந்த வன்முறை என்பது வெறும் பெண்கள் மீது நடக்கிற தாக்குதல் மட்டுமில்ல, பாஜகவினுடைய அடுத்தக்கட்ட கோரமான வடிவம். பெண்களுக்கும் அங்கு கொல்லப்பட்ட ஆண்களுக்கும், அங்கு நிலவுகிற அந்த அமைதியின்மைக்கும் தீர்வு காணாமல் ஆளும் பாஜக அரசு அதை வேடிக்கை பார்க்கிறது என்று குறிப்பிட்டார்.
பெண்கள் மீதே குறி
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கலந்து கொண்ட அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் சுகந்தி “இரு நாடுகளோ, தேசங்களோ, மாநிலங்களோ, இனங்களோ இப்படி இரு தரப்பினருக்கான சண்டைகள் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் பெண்களே குறி வைக்கப்படுகின்றனர், எவ்வளவு பெரிய ஆயுதத்தை வைத்திருந்த போதும் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்வதையே பிரதானமான ஆயுதமாக தங்கள் கைகளில் கலவரக்காரர்கள் வைத்திருக்கிறார்கள்”. என்று மணிப்பூரில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்முறைகளைக் கண்டித்து பேசினார்.
மணிப்பூரின் நிலையை களத்திலிருந்து ரிப்போர்ட் செய்த ஊடகவியலாளர் க்ரீஷ்மா குத்தார் “மணிப்பூரில் நீங்கள் பார்த்த வீடியோவை விட மோசமான வன்முறை வீடியோக்கள் வெளிவருகின்றன. ஆனால் நாம் யாரும் அதன் தீவிரத்தை புரிந்து கொள்ளவில்லை. இது மாதியான வன்முறை வெறும் மணிப்பூரில் மட்டும் நடக்கவில்லை, இந்தியாவில் பல இடங்களில் நடக்கிறது. எப்படி இஸ்லாமியர்களை பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று கட்டமைக்கின்றனரோ, அதே போல, மணிப்பூர் மக்களையும் மியான்மரிலிருந்து வந்தவர்கள் என்கிறது பாஜக அரசு.
இந்த வன்முறையால் அங்கே வாழ முடியாமல் அகதிகளாக வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் மக்களின் நிலை என்ன? ஆனால் மணிப்பூரின் உண்மை நிலவரத்தை வெளியே கொண்டு வர இங்கு இருக்கும் செய்தி தொலைகாட்சிகள் எதுவும் முன்வரவில்லை என்பதுதான் உண்மை. குக்கி-சோ பழங்குடி பெண்ணின் நிர்வாண வீடியோ வெளியாகி உலக அளவில் பரவியும்கூட இந்தப் போரை நிறுத்த முடியவில்லை” என்றார்.
இதே சூழல் தமிழ்நாட்டுக்கு வரும்
தென்னிந்திய திருச்சபை சார்பில் பேசி ஆயர் ஜாக்குலின் ஜோதி, “மணிப்பூரில் ஏற்பட்ட இந்த வன்முறை ஒரு சாதாரண வன்முறையல்ல, இது நில அபகரிப்பு, அரசே தூண்டிவிட்ட ஒரு கலவரம், போராட்டக்காரர்களுக்கு கொடுக்கப்பட்ட கொலைமிரட்டல், பல மக்கள் அகதிகளாக இருப்பிடங்களை விட்டு வெளியே வந்த சூழல் என எல்லாவற்றையும் அறிகிறோம். இச்சூழல் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு காலதாமதமாகாது, ஆகவே இந்த மாதிரியான வன்முறை நம் மாநிலங்களில் நிகழாமல் இருப்பதற்கு இந்த நேரத்தில் நம் குரலை உயர்த்துவது மிகமிக அவசியம்” என்றார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழ. வெற்றிச் செல்வன், ”மணிப்பூரில் உள்நாட்டு மக்களை கொல்வதற்கான அதிகாரம் ராணுவத்துக்கு கொடுக்கப்பட்டது. இவ்வளவு மோசமாக இருக்கக் கூடிய சட்டம் அதற்கு எதிரான போராட்டம் தான் இங்கே பல ஆண்டு காலம் நடந்துவந்தது. இந்துத்துவா அரசியல் என்பது அந்ததந்த மாநிலத்துக்கு ஏற்ற ஒரு மாடலை வைத்திருக்கிறார்கள். இந்தக் கலவரங்கள், போர், நிற்க வேண்டுமென்றால் அவர்களுடைய செயல் தந்திரத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். இந்த கலவரங்களை நிறுவனமயமாக்கி கட்டவிழ்த்துவிடுகின்றனர். ஒன்றாக இருந்த மக்களிடம் வெறுப்பை தூண்டிவிட்டு பிளவுப்படுத்துவதே ஆர் எஸ் எஸ்ஸின் சித்தாந்தம். இந்த வன்முறையை நிறுத்த வேண்டுமென்றால் மக்களை அரசியல்படுத்த வேண்டும். பாஜக. ஆர்.எஸ்.எஸ் எப்படி இயங்குகிறது, அவர்கள் கோட்பாடு என்ன என்ற செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்றார்.
திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் வழ.மதிவதனி, ”பாஜக, ஆர்.எஸ்.எஸ் சொல்கிற முதல் வார்த்தை ஊடுருவக்காரர்களிடமிருந்து உங்களை பாதுகாக்கப் போகிறோம் என்பதுதான். பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தானிடமிருந்து தாக்குதல் என்று ஆபத்துகளைச் சொல்லி மக்களை நம்ப வைக்கிறார்கள். ஆனால் உண்மையாகவே இந்தியா முழுமைக்கும் அப்படி ஒரு பேராபத்து இருக்குமென்றால் அது ஆர்.எஸ்.எஸ் தான்.
மனித தன்மையற்றவர்களாக இந்த 15 வருடத்தில் நம்மை அறியாமல் நாம் மாறிக்கொண்டு இருக்கிறோம். இஸ்லாமியர்களை எதிரியாக பாஜக கட்டமைக்கிறது. இந்தக் கலவரத்தில் இரண்டு தரப்பு மக்களுமே சாக வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்ஸின் எண்ணமாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கக் கூடிய ஆர்.எஸ்.எஸ்ஸை தூக்கி எறிந்தால் தான் மணிப்பூர் போல மற்ற மாநிலங்கள் பற்றி எரியாமல் இருக்கும்” என்றார்.
இறுதியாகப் பேசிய மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன், “வரலாற்று ரீதியாக இந்த மண்ணை, பூமியை, நீரை காத்த பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிதான் இந்த வன்முறை. ஏறத்தாழ 12 ஆண்டு காலமாக மெய்தி மக்களுக்கும் குக்கி இன மக்களுக்கும் பிரச்சனை நடக்கிறது.
இதை பாஜக தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இன்றைக்கு இந்த காவி பாசிசம் நாம் உண்ணும் உணவில், உடுத்தும் உடையில் பாசிசத்தை திணிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் நூறு ஆண்டுகளாக தான் கொண்ட நோக்கமான இந்துராஷ்டிரத்தை நிறுவிக் கொண்டிருக்கிறது, இந்தியா என்பது இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதாக பா.ஜ.க கட்டமைக்கிறது. இதன் விளைவே மணிப்பூரின் இன ரீதியான வன்முறை” என்றார்.
கனிஷ்கா சிதம்பரம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நுழைவுத் தேர்வில் மோசடி: எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது!
டாப் 10 செய்திகள் : காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் மோடி பிரச்சாரம் வரை!
ஹெல்த் டிப்ஸ்: நாள்தோறும் 10,000 நடைகள் என்பது சாத்தியமா?
பியூட்டி டிப்ஸ்: மாறிவரும் பருவநிலைக்கேற்ப உங்களை அழகாக்கிக் கொள்வது எப்படி?
Comments are closed.