ஒருசிலருக்கு, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுந்தால், பாதத்தில் தாங்கமுடியாத அளவுக்கு வலி ஏற்படும். அடுத்த சில நிமிடங்களுக்கு, நகர முடியாத அளவுக்கு சிக்கலை எதிர்கொள்வர். இன்னும் சிலருக்கு, காலையில் எழுந்தவுடன் குதிகாலில் வலி எடுக்கும். இப்படியானவர்கள், பாத பராமரிப்புக்கும் – பாத வலியை தவிர்க்கவும் என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாமென பிசியோதெரபிஸ்ட் பிருந்தா ஆனந்திடம் கேட்டோம்.
“நம் உடலை தாங்குவதே, நம் பாதங்கள்தான். அதனாலேயே, அதிக நேரம் நிற்பவர்களுக்கும் நடப்பவர்களுக்கும் பாரம் அதிகமாகி, தாங்கமுடியாத அளவுக்கு பாதவலி அடிக்கடி ஏற்படும். குறிப்பாக உடல் பருமனாக இருப்பவர்கள், சிறிது நேரம் நின்றுகொண்டே இருந்தாலும் பாதவலி ஏற்பட்டுவிடும். இந்த அதிக உடல் பாரம் என்பதை தாண்டி, பாதவலி ஏற்பட ப்ளான்டர் ஃபேஸிடிஸ், எலும்பு அழற்சி என நிறைய காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு, பாதத்தில் இருக்கும் ப்ளாட்டாஃபேசியா என்ற படலத்தில் அழற்சியோ, பலமான அடியோ ஏற்படுவதுதான் காரணம் என்கிறது மருத்துவம். மேலும் வயதாகும்போது ப்ளாட்டாஃபேசியா படலம் சுருங்கத் தொடங்கும். அதனால்தான் வயதானவர்களுக்கு அதிகமாக குதிகால் வலி, பாத வலி ஏற்படுகிறது.
பயிற்சிகளைத் தொடங்கும் முன், உங்கள் பாதவலிக்கான காரணத்தை கண்டடையுங்கள். குறிப்பாக உபயோகப்படுத்தும் செருப்புதான் உங்களுக்கு எரிச்சலையோ வலியையோ தருகிறதா என ஆராயுங்கள். அவைதான் பிரச்னை என்றால், உங்கள் பாதத்துக்கு ஏற்ற நல்ல வகை செருப்பை அணியுங்கள். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, அதன்காரணமாகத்தான் பாதவலி ஏற்படுமென்பதால், நீங்கள் கீழ்க்காணும் பயிற்சியோடு சேர்த்து, உடல் எடை குறைப்புக்கான ஆலோசனைகளையும் பரிசீலியுங்கள்.
அனைத்து பயிற்சிகளையும் தொடங்கும் முன், பாதத்தை மேல் கீழ் – வலம் இடம் என நன்கு அசைத்து அசைவுகளுக்கு பழக்கவும். முடிந்தால், வட்ட வடிவத்துக்கு பாதங்களை சுழற்றவும்.
**
Seated Calf Stretching
**

கால்களை நீட்டிக் கொண்டு, துண்டு ஒன்றின் உதவியோடு, இந்தப் பயிற்சியை செய்ய வேண்டியிருக்கும். துண்டின் இரு முனையையும் இரு கைகளில் பிடித்துக் கொண்டு, துண்டின் நடுப்பகுதியை கொண்டு, வீடியோவில் காட்டியுள்ளது போல, உள்ளங்காலில் சுற்றிக் கொள்ளுங்கள். இப்போது, துண்டை உங்களை நோக்கி இழுங்கள். இப்படி இழுக்கும்போது, காலின் பின்பகுதியில் உங்களால் வலியை உணர முடியும். இரண்டு கால்களிலும், இதை செய்யவும்.
**
Ball Massage
**

சற்று கடினமாக இருக்கும், ஸ்ட்ரெட்ச் பால் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை தரையில் வைத்துக்கொண்டு, உங்கள் காலில் எந்தப் பகுதியில் வலி இருக்கிறதோ, அப்பகுதியை பந்தின் மீது வைத்து, நன்கு அழுத்தம் கொடுங்கள். சில நிமிடங்களுக்கு செய்தால் கூட இது போதுமானதாக இருக்கும். அதிகபட்சம், 10 நிமிடங்களுக்கு இந்தப் பயிற்சிசெய்யவும்.
**
Ice Massage
**

வாட்டர் பாட்டில் ஒன்றில் முழுவதுமாக தண்ணீர் நிரப்பி, அதை ஃப்ரீஸ் செய்து ஐஸ்கட்டியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஃப்ரீஸ் ஆன வாட்டர் பாட்டிலை, தரையில் வைத்து, வலி உள்ள பகுதியை அதன்மீது வைக்கவும். தொடர்ந்து, வாட்டர் பாட்டிலை, கால்களாலேயே நகர்த்தவும். இப்படி செய்யும்போது, பாதத்திலுள்ள அழற்சிப் பிரச்னைகள் சரியாகும்.
**
Calf Streteching
**

நின்ற நிலையில், வலி இருக்கும் பாதத்தை பின்னோக்கியும், வலி இல்லாத பாதத்தை முன்னோக்கியும் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சிக்கு முன் உள்ள காலின் முட்டியை, முடிந்தவரை மடிக்க வேண்டும். இப்படி மடிக்கும்போது, பின்னுள்ள காலின் குதிகாலை சற்று உயர்த்த வேண்டும். இதை செய்யும்போது கைகளை, ஏதேனும் சுவரில் வைத்து முட்டுக் கொடுத்துக் கொண்டு பயிற்சியை செய்வது நல்லது. இப்படியாக, `வலியுள்ள குதிகால் உயர்த்தி – வலியில்லா காலினை மடித்து’ முப்பது நொடிகள் தொடர்ச்சியாக நிற்க வேண்டும். இடைவெளி விட்டுவிட்டு, இப்படி செய்யவும்.
**
Heel Exercise
**

படிக்கட்டில், உள்ளங்காலுடைய முன் பாதியை மட்டும் வைத்துக் கொள்ளவும். கைப்பிடி ஒன்றை பிடித்துக் கொண்டு, பின் பகுதி உள்ளங்காலினை மேல்நோக்கி உயர்த்தவும். எத்தனை நொடிகளுக்கு முடிகிறதோ, அத்தனை நொடிகளுக்கு உயர்த்தி வைக்கவும். பின் கால்களை ரிலாக்ஸாக்கி, இயல்பு நிலைக்கு வந்துவிட்டு, சில விநாடி கழித்து மீண்டும் பயிற்சியை செய்யவும்.
**
Intrinsic Muscle Exercise
**

நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டு, பாதத்துக்கு கீழ் துண்டை வைத்துக் கொள்ளவும். இப்போது, துண்டினை கால் விரல்கள் மூலம் மடிக்கவும். இது விரல்களோடு தொடர்புடைய நரம்புகளைக் காக்க உதவும்.
இந்தப் பயிற்சிகள் அனைத்தையும் தொடர்ச்சியாக செய்துவந்தால், விரைவில் குதிகால் வலி சரியாகும்.
**
இப்பயிற்சிகளை, வீடியோ வடிவில் காண :
**
**
[https://youtu.be/1w5XCwKpZaA](https://youtu.be/1w5XCwKpZaA)
**
**
நன்றி : பிருந்தா, பிசியோதெரபிஸ்ட் | Behind Health
**- ஜெ.நிவேதா**









