ADVERTISEMENT

திருப்பூர் மேயர் வீட்டுக்கு அபராதம் விதிப்பு – காரணம் என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

Reason for imposing house fine by Tiruppur Mayor

திருப்பூர் மேயரின் வீட்டு மின் இணைப்பில் கட்டுமான பணிகள் நடந்த நிலையில் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

திருப்பூர் மாநகராட்சி மேயராக இருப்பவர் தினேஷ்குமார். இவரது வீடு காங்கயம் அடுத்த புதூர் ரோடு பகுதியில் உள்ளது. தற்போது அவரது வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் கட்டுமானப் பணி நடக்கும் பகுதியில் வீட்டு மின் இணைப்பை ஒப்படைத்து விட்டு, தற்காலிக மின் இணைப்பு பெற கடந்த மாதம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்காலிக மின் இணைப்புக்கான டிபாசிட் தொகை செலுத்தாமல் இருந்த காரணத்தால் அந்த மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் கட்டுமானப் பணிக்கு வீட்டு மின் இணைப்பை பயன்படுத்துவதாக மின் வாரிய பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு நேற்று மின் வாரிய பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். இதில் வீட்டின் மின் இணைப்பில் கட்டுமான பணி நடந்தது தெரிய வந்ததால் ரூ.42,500 அபராதம் விதித்து அந்த மின் இணைப்பை துண்டித்தனர்.

மேலும் பணியில் அலட்சியமாக இருந்த மின் வாரிய ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து மேயர் தினேஷ் குமார் கூறுகையில், எனது அம்மாவின் பெயரில் தற்காலிக மின் இணைப்பு பெற மின்வாரியம் நிர்ணயித்த டெபாசிட் தொகையான ரூ.16,935 ஐ கடந்த அக். 13 ம் தேதி செலுத்தினேன்.

ஆனால் மின் வாரியம் தற்காலிக மின் இணைப்பை தருவதில் தாமதம் செய்து விட்டது. தற்போது இந்த அபராத நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து மின் வாரியத்துக்கு சட்டரீதியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். நாங்கள் வசிக்கும் வீட்டில் ஒரு பகுதியில் தான் கட்டுமானப் பணி நடக்கிறது. ஒரு பகுதியைப் பயன்படுத்தி வருகிறோம். எனவே, அந்த வீட்டு உபயோக மின் இணைப்பு பயன்பாட்டில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share