ரேஷன் பொருட்கள் எடை குறைவு… காரணம் யார்? – ரேஷன் கடை ஊழியர்கள் அதிரடி முடிவு!

Published On:

| By vanangamudi

ration shop employees big protest on july 7

தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளது. அதன்மூலம் சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் கைரேகை பதிவு செய்து அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ration shop employees big protest on july 7

எனினும் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக வரும் அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்களின் எடையை விட, உண்மையில் குறைவாகவே தங்களுக்கு வழங்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மேலும் சர்க்கரை கிலோவிற்கு 200 முதல் 300 கிராம் வரையும், அரிசி 250 கிராமுக்கு அதிகமாக குறைத்து வழங்குவதாக புகார்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூலை 7ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத் தலைவர் ஜெயச்சந்திர ராஜாவை தொடர்பு கொண்டு பேசினோம்.

அப்போது அவர், “தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளது. ஆனால் 22 ஆயிரம் ஊழியர்கள் தான் பணியாற்றுகின்றனர். அதில் மூன்றில் ஒரு பங்கு கடைகளுக்கு விற்பனையாளர்கள் இல்லை. 99 சதவீத கடைகளுக்கு எடையாளர்கள் இல்லை. இதனால் விற்பனையாளரே பில், கம்யூட்டர் பதிவு, கைரேகை பதிவு, எடை போடுதல் என எல்லா வேலைகளையும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக எடையாளர் பணிக்கு தனியாக உள்ளூரைச் சேர்ந்த ஒருவரை நாங்களே பணியமர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவருக்கு சம்பளம் கொடுக்க முடியாது என்பதால் பொதுமக்களுக்கு பொருட்களை எடைக்குறைத்து வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இது போதாது என்று தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் கிடங்கு மூலம் ரேஷன் கடைகளுக்கு வரும் மூட்டையிலேயே எடை குறைத்து தான் அனுப்பி வைக்கப்படுகிறது.

பொதுவாக அரிசி மூட்டை 50 கிலோ 650 கிராம் எடை இருக்கும். சர்க்கரை, பருப்பு மூட்டைகள் 50 கிலோ எடை இருக்கும். ஆனால் குடோனில் இருந்து கடைக்கு வரும் அரிசி மூட்டையில் 3 முதல் 5 கிலோ வரை எடை குறைகிறது. சர்க்கரை ஒரு மூட்டைக்கு 1 கிலோ முதல் 2 கிலோ வரை குறைகிறது. இதேபோன்று கடலை துவரம் பருப்பு 2 முதல் 3 கிலோ வரை எடை குறைகிறது.

இப்படி குறைந்த எடையுடன் வரும் பொருட்களை வைத்து நாங்கள் மட்டும் எப்படி சரியாக கொடுக்க முடியும்? அதனால் தான் பொதுமக்களுக்கு பொருட்களை குறைத்து வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்றார்.

மேலும் அவர், “ரேஷன் கடையில் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் கொண்டு வந்ததை வரவேற்கிறோம். அது மக்களுக்கு நல்லது தான். ஆனால் இங்கு நிலவும் எதார்த்த நடைமுறை சிக்கலை அரசு அதிகாரிகள் புரிந்துகொள்வதில்லை.

எனவே தான் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் கிடங்கின் எடை மிஷினையும், ரேஷன் கடையில் உள்ள எடை மிஷின் மற்றும் விற்பனை முனையத்தை ஒன்றாக இணைக்க வேண்டும் என கோருகிறோம். இதன்மூலம் எங்கு எடை குறைகிறது. உண்மையில் சிக்கல் ஏற்படுத்துவது யார் என்பது தெரியவரும்.

மேலும் காலியிடங்களாக உள்ள ரேஷன் கடைகளில் தேவையான விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் நியமிக்க வேண்டும். அப்போது தான் பணிச்சுமையின்றி, தாமதமும் ஏற்படாமல் பொதுமக்களுக்கு நியாயமான முறையில் பொருட்களை வழங்க முடியும்.

இதனை வலியுறுத்தி தான் வரும் ஜூலை 7ஆம் தேதி திங்கள் கிழமையன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் 35 ஆயிரம் ரேஷன் கடை ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதற்கும் தீர்வில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்தையும் தீவிரப்படுத்துவோம்” என ஜெயச்சந்திர ராஜா தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share