திருப்புவனம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த கோவில் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தைச் சந்திப்பதற்காக நடிகர் விஜய் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் விஜய்யின் இந்த பயணம் தொடர்பாக போலீசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படலையாம். TVK Vijay Ajithkumar lockup death
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார், போலீசார் விசாரணையின் போது தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அஜித்குமார் குடும்பத்துக்கு போனில் ஆறுதல் கூறினர்.
மேலும் அஜித்குமார் குடும்பத்துக்கு அமைச்சர் பெரியகருப்பன், எம்.எல்.ஏ. தமிழரசி, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன், அன்புமணி பாமக பொருளாளர் திலகபாமா உட்பட ஏராளமானோர் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அஜித்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யும் செல்கிறார்.
ஆனால் நடிகர் விஜய், மடப்புரம் செல்வது தொடர்பாக போலீசுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லையாம். இது பற்றி தவெகவினர் கூறுகையில், கொடைக்கானலில் நடைபெற்ற ஜனநாயகன் படப்பிடிப்புக்காக விஜய் மதுரை வந்த போது முதலில் பாதுகாப்பு கொடுக்குமாறு போலீஸ் எஸ்பியிடம் வேண்டுகோள் வைத்தோம். ஆனால் எஸ்பியோ, சூட்டிங் தானே போகிறார்.. இதற்கு எல்லாம் பாதுகாப்பு தருவதா? என பதில் சொல்லி தவெகவினர் கோரிக்கையை நிராகரித்திருக்கிறார்.
இதன் பின்னர் மதுரை விமான நிலையத்தில் விஜய் வந்திறங்கிய போது, கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. இந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசாரும் போதுமான அளவும் இல்லை. கடுமையான கூட்ட நெரிசலுக்கு மத்தியில்தான் கட்சியினரிடம் இருந்து விடைபெற்று கொடைக்கானல் சென்றார் விஜய்.
தற்போதும் விஜய் தரப்பு, போலீசில் முன்கூட்டியே சொன்னாலும் அவர்கள் எதுவும் செய்யப்போவது இல்லை.. எதற்காக சொல்லிவிட்டு போக வேண்டும்? என்கிறது. இதனால்தான் விஜய் இந்த முறை போலீசிடம் தகவல் தெரிவிக்காமலேயே அஜித்குமார் குடும்பத்தை சந்திக்க செல்கிறார் என்றனர்.