நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் எனப்படும் என்.எல்.சி நிறுவனம் அடிக்கடி செய்திகளில் அடிபடும். அண்மையில் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக விளைநிலங்களை கையகப்படுத்தியதை அடுத்து சமீபத்தில் நடந்த போராட்டங்களால் நெய்வேலியே ஸ்தம்பித்தது.
ஆனால் இப்போது வெளியே எவ்வித போராட்டங்களும் நடக்காமலேயே… என்.எல்.,சி. நிர்வாகமே கடந்த ஒன்பது நாட்களாக ஸ்தம்பித்துக் கிடக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம், என். எல். சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நெட்வொர்க் சைட் கடந்த ஒன்பது நாள்களாக முடக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகில் அமைந்திருக்கும் என். எல். சி. இந்தியா லிமிடெட் நிறுவனம் தொடங்கி சுமார் 68 வருடங்கள் ஆகிறது.
இந்த நிறுவனத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 27 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணிசெய்து பலன் பெற்று வருகின்றனர்.
அனல் மின் நிலையம், காற்றாலை மற்றும் சோலார் மூலமாக சுமார் 6300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் இரண்டாயிரம் கோடி நிகர லாபம் ஈட்டி வரும் என். எல். சி. நிறுவனம், கடந்த ஒன்பது நாள்களாக முடங்கிப் போயிருக்கிறது,
பணப் பரிமாற்றம் செய்ய முடியவில்லை. இ டெண்டர் விட முடியாமல் ஆன் லைன் போர்டல், nlc procure இணைய தளம் மற்றும் சர்வர் முடக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணி குறித்து என்.எல் .சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தோம்.
“NLC net work சர்வர் ஜூலை 2 ஆம் தேதி முதல் ஹாக் செய்யப்பட்டது. இதனால் ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் போட முடியவில்லை, இ டெண்டர் போட முடியவில்லை, ஜி எஸ் டி செலுத்த முடியாமல் தவித்து வருகிறது எல்எல்சி நிர்வாகம்.
ஒப்பந்ததாரர்கள் பில் ஏன் போடவில்லை என்று கேட்கும் போது சர்வர் பிராப்ளமாக உள்ளது சரியாகிவிடும் சரியாகிவிடும் என்று கடந்த ஒன்பது நாள்களாக சொன்ன பதிலையே சொல்லி வருகிறோம்.
CSO, CISO ( தலைமை செக்யூரிட்டி ஆபீஸர், தலைமை இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி ஆபீசர்) இவர்கள் தினந்தோறும் பரிசோதனை செய்ய வேண்டும். என்.எல்.சி. சம்பந்தப்பட்ட இணைய தளங்களில் வைரஸ் இருக்கிறதா என கவனிக்க வேண்டும். தேவை இல்லாத மெயில் வருகிறதா, அந்த மெயில் மூலம் வைரஸ் வருகிறதா என்பதையும் இவர்கள்தான் கண்காணிக்க வேண்டும்.
பொதுவாக அரசு நிறுவனங்களில் பயன்படுத்தும் புரொடக்ஷன்ஸ் ஃபையர்வால் லேயர் ஸ்ட்ராங் இல்லாதவை. எனவே இணைய ரீதியிலான பாதுகாப்பு குறைவு. அதனால், வெளிநாட்டு சமூக விரோதிகள் தங்களது அதிநவீன தொழில் நுட்பம் மூலமாக இதுபோன்ற அரசு நிறுவனங்களின் தளங்களுக்குள் புகுந்து Ransomeware Encryption செய்து விடுவார்கள். அதாவது சர்வரை ஹேக் செய்துவிடுவார்கள். மீண்டும் decryption செய்து ஆக்டிவிட்டி செய்வதற்கு அவர்கள்தான் கீ கொடுப்பார்கள்.
அப்படித்தான் என் எல் சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சர்வரை முடக்கம் செய்துவிட்டனர். இதை ரிலீஸ் செய்வதற்கு பல கோடிகளை கிரிப்டோ கரன்சி மூலமாக அனுப்பினால் decryption செய்து தருவதாக நிபந்தனை விதித்திருக்கிறார்கள். பேச்சு வார்த்தை நடந்து வருகிறது” என்றனர் என்.எல்.சி. வட்டாரங்களில்.
இதைப் பற்றி என். எல். சி கார்ப்பரேட் கம்யூனிகேஷன் டி. ஜி. எம். கல்பனா தேவியிடம் கேட்டோம்.
“கடந்த 2 ஆம் தேதி ஒரு சர்வர் பிரச்சினையாக இருந்தது. அதனால் அனைத்து சர்வரையும் பயன்படுத்தாமல் நிறுத்திட்டு ஏற்கனவே பேக் அப் வைத்திருந்ததை வைத்து ஒவ்வொன்றாக சரிசெய்து வருகிறோம். சாதாரண வைரஸ் தான் மற்றபடி ஒன்றும் இல்லை” என்றார்.
ஆனால் அதிகாரிகள் மத்தியில் இதைப்பற்றி யாரும் போனில் பேசவேண்டாம், இது ஒரு சென்சிடிவான பிரச்சினை என்று நிர்வாகம் அறிவுறுத்தி வருவதாக சொல்கிறார்கள்.
வல்லரசு நாடு என சொல்லக்கூடிய அமெரிக்காவின் ரயில்வே சைட்டை ஹேக் செய்தவர்கள்… பேரம் பேசி பணத்தைப் பெற்றுக்கொண்டு தான் decryption செய்ய கீ வேர்டு கொடுத்திருக்கிறார்கள்.
இந்த பின்னணியில் இந்தியாவில் இப்போது அரசு நிறுவனங்களை ஹேக் செய்வதும், அதற்காக கோடிக்கணக்கான கிரிப்டோ கரன்சிகள் தருமாறு பேரம் பேசுவதும் நடப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வருகின்றன.
இந்த டிஜிட்டல் கடத்தலை எப்படி கையாளப் போகிறது ஒன்றிய அரசு?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வணங்காமுடி
கனமழைக்கு வாய்ப்பு : எந்தெந்த மாவட்டங்களில்?
ஆம்ஸ்ட்ராங் கொலை… 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்!