குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த சென்ற 14 வயது சிறுவன் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மட்டுமின்றி அநேக இடங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
அதிகப்படியான வெப்பம் மனிதர்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் ஒரு சிறுவன் உயரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் தேசிக்குப்பம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சத்யா. இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும், ஹர்ஷன், பரத் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
மகன்களுக்கு கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், குடும்பத்தினருடன் நத்தம் பகுதியில் மலை உச்சியில் உள்ள மூக்கில்வாடி அம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்றுள்ளார்.
அடிவாரத்தில் இருந்து நடந்து சென்றபோது மூத்த மகன் ஹர்ஷன் (வயது 14) திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதறி போன பெற்றோர் அவரை உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஹர்ஷனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் சிறுவன் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…