பாமக செயல் தலைவராக ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீ காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாமகவில் கடந்த ஓராண்டாகவே நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் இரு துருவமாக செயல்பட்டு வருகின்றனர்.
அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ராமதாஸை அன்புமணி சந்திக்கவில்லை. மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவர்களிடம் மட்டும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்துவிட்டு வந்துவிட்டார்.
இதற்கிடையே பாமகவின் விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதற்கு அன்புமணி பதிலளிக்காததால் அவரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ்.
அன்புமணி செயல்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் இன்று (அக்டோபர் 25) தர்மபுரியில் நடைபெற்று வரும் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியை பாமகவின் செயல் தலைவர் பொறுப்பில் நியமிப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘ செயல் தலைவர் என்ற பொறுப்பை நான் உருவாக்கினேன். இந்தப் பொறுப்புக்கு நான் தகுதி இல்லை என்று ஒருவர் சொல்லி விட்டதால், அந்த செயல் தலைவர் பொறுப்பை என்னுடைய பெரிய மகள் ஸ்ரீ காந்திக்கு அளிக்கிறேன். அவர் கட்சியையும் வளர்ப்பார். எனக்கும் பாதுகாப்பாக இருப்பார்’ என்றார்.
அப்போது ராமதாஸ் அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீ காந்தி எழுந்து, கையெடுத்து கும்பிட்டு தனது தந்தையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
