மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கோவைக்கு வருகை தந்த நிலையில் கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Rajnath Singh Coimbatore
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் மனைவி சாவித்திரி சிங், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக கோவைக்கு நேற்று ஜூன் 29-ந் தேதி காலை வருகை தந்தார் ராஜ்நாத் சிங். கோவை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர் மதிவேந்தன், ராஜ்நாத் சிங்கை வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற ராஜ்நாத் சிங், அங்கு சிகிச்சை பெற்று வரும் மனைவியின் உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் நேற்று மாலை மருதமலை முருகன் கோவிலில் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து கோவையில் உள்ள கடற்படை விருந்தினர் விடுதியில் ஓய்வெடுத்தார்.
இதனிடையே ராஜ்நாத் சிங் வருகை தந்த சிறிது நேரத்திலேயே கோவை விமான நிலையத்துக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சந்தேகத்துக்குரிய எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.