ADVERTISEMENT

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம்!

Published On:

| By Minnambalam Desk

Rajini Kamal

கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகம் ஆனவர் ரஜினி . அதன் பின்னர் கமல்ஹாசன் ஹீரோ- ரஜினி வில்லன் என ஆடுபுலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது என பல படங்கள் வந்தன. பைரவி படத்தின் மூலம் ரஜினியும் ஹீரோ ஆனார் .

அதன் பின்னரும் கமல்ஹாசனும் ரஜினியும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த சூழலில் ஒரு நிலையில் கமல்ஹாசன் ஒரு முடிவுக்கு வந்தார்.

ADVERTISEMENT

ரஜினியைப் பார்த்து , ” நாம ரெண்டு பெரும் ரெண்டு ஹீரோக்கள் . ஆனா ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பதால் நமக்கு மொத்தமா ஒரு ஹீரோ சம்பளம் தான் தர்றாங்க . பிசினஸ்சும் ஒரு படத்துக்கான பிசினஸ்தான் நடக்குது ( உருப்படியாக கதை எழுதாமல் ஊருக்கு ஒரு ஹீரோவை கொண்டு வந்து, தேவையில்லாமல் ஸ்லோ மோஷனில் நடக்க விட்டு உப்புமா கிண்டும் பழக்கம் அப்போது எல்லாம் இல்லை)

அதே நாம தனித்தனியாக நடிச்சா ரெண்டு படம் ஆளுக்கு ஒரு முழு சம்பளம் . ரெண்டு பிசினஸ். எனவே நாம இனி சேர்ந்து நடிக்க வேண்டாம்” என்று சொல்ல, ரஜினியும் அதை ஏற்றுக் கொண்டார்.

ADVERTISEMENT

அந்த சமயத்தில் ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்க வி.சி. குகநாதன் ஒப்பந்தம் செய்திருந்த ஒரு படத்தை உடனே மறுத்தார் கமல்ஹாசன்,

உடனே கமல் கேரக்டரில் ரஜினியைப் போட்டு , அந்தக் கேரக்டரை இன்னும் ஸ்ட்ராங் ஆக்கி , ரஜினிக்கு என்று இருந்த கேரக்டரை கொஞ்சம் குறைத்து படத்தை முடித்தார் குகநாதன் . இனி ரஜினிதான் தனிக்காட்டு ராஜா என்று பொருள் படும்படி படத்துக்கு தனிக்காட்டு ராஜா என்றும் பெயர் வைத்தார் குகநாதன் .

ADVERTISEMENT
விளைவு?

தியாகராஜ பாகவதர் – பி யூ சின்னப்பா, எம் ஜி ஆர் – சிவாஜிக்கு அடுத்து கமல்- ரஜினி என்று ஆனது .

அதன் பிறகு அவ்வப்போது ‘ரஜினியும் கமலும் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும்?’

‘தெரியாதா? மணிரத்னம் அப்படி ஒரு படம் இயக்குகிறார் ‘

‘இல்லை இல்லை ஷங்கர் இயக்குகிறார் ‘

‘ரஜினி படத்தில் கமலும், கமல் படத்தில் ரஜினியும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்கள் ‘

‘கமல் எழுதி நடித்து இயக்கும் படத்தை ரஜினி தயாரிக்கிறார்’ என்று மானாவாரியாக தகவல்கள் வந்து கொண்டே இருக்கும் . பரபரப்பாக ஏதும் செய்தி இல்லை என்றால் சில மீடியாக்களே இப்படி ஏதாவது கட்டி விடும்

ஒருவழியாக இப்போது ..

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க ரஜினி நடிக்கும் படம் ஒன்றை சுந்தர் சி இயக்கப் போகிறார் என்று ஒரு நம்பகமான தகவல் வந்திருக்கிறது .

பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share