நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் நேற்று வெளியானது.
ரஜினி – லோகேஷ் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கூலி. இதில், நாகார்ஜுனா, சௌபின் சாகிர், உபேந்திரா, சத்தியராஜ், ஸ்ருதிஹாசன், கௌரவ வேடத்தில் ஆமிர்கான் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
நேற்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்தியா முழுவதும் திரையரங்குகளில் முதல் நாளில் ரூ.65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல்களை வழங்கும் Sacnilk இணையதள தகவல்படி, முதல் நாளில் கூலி படம் 65 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல்கள் வருகின்றன. ஆனால் தயாரிப்பு நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக் அறிவிக்கவில்லை.
இந்த தகவலின் படி, ரஜினியின் கூலி படத்துக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும், அது லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான விஜய் நடிப்பில் வெளியான லியோ முதல் நாள் வசூலை முறியடிக்கவில்லை. லியோ படம் முதல் நாளில் 76.2 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.
எனினும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான கைதி (முதல் நாள் வசூல் – ரூ.6.4கோடி), கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் (ரூ.37.5 கோடி) ஆகிய படங்களை முறியடித்துள்ளது.
அதேசமயம் டி.ஜே. ஞானவேலின் வேட்டையன் (ரூ. 31.5 கோடி), நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் (ரூ. 48.35 கோடி), கார்த்திக் சுப்பராஜின் பேட்டை (ரூ. 14 கோடி), ஷங்கரின் 2.0 (ரூ. 23 கோடி) ஆகிய படங்களின் முதல்நாள் வசூலை கூலி முறியடித்துள்ளது.
விரைவில் கூலி ரூ. 150 கோடியை எளிதில் தாண்டிவிடும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.