தமிழ்திரையுலகின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்தின் நடிப்புக்கு எப்படி கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்களோ, அதே போன்று அவரின் இயல்பான மேடைப்பேச்சுக்கும் அதே அளவிலான ரசிகர்கள் உள்ளனர். rajinikanth bald story goes viral ahead of coolie
தனது பட விழாக்கள் மற்றும் பொதுவிழாக்களில் அவரது பேச்சுகள் சுவாரசியமாகவும், அவரது நடிப்பை போலவே ஸ்டைலாகவும் இருப்பது பலரையும் கவரும் ஒன்றாக உள்ளது.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக இணையத்தில் அவரது பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
1996ஆம் ஆண்டு சென்னையில் நடந்த சினிமா எக்ஸ்பிரஸ் விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்த் ரூ.4000 கொடுத்து தலையை மொட்டை அடித்துக்கொண்டு வேதனைப்பட்ட கதையை அரங்கமே அதிர்ந்து சிரிக்கும் வகையில் பேசியுள்ளார்.
அதில் அவர், “நான் இந்த விழாவிற்கு வரும்போது, என் படத்தை பற்றி பேசுவதை விட்டு ’ஏன் உங்கள் தலையை மொட்டையடித்தீர்கள்?’ எனக் கேட்டார்கள்.
அதைப்பற்றி நான் இப்போது சொல்கிறேன். சமீபத்தில் நான் நியூயார்க் போகும்போது, விமானத்தில் ஒரு விளம்பரத்தைத் பார்த்தேன். அதில் ’லேட்டஸ்ட் ஹேர்ஸ்டைல் ஆஃப் நியூயார்க்’ எனக் கூறி, அதுக்கு கீழே தொடர்புக்கு தொலைபேசி எண்ணும் கொடுத்திருந்தார்கள்.
நானும் அப்போது ஹேர்ஸ்டைலை சேஞ்ச் பண்ணனும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அதை பார்த்ததும், ’அப்போ லேட்டஸ்ட் நியூயார்க் ஹேர்ஸ்டைலை டிரை பண்ணுவோம்’ என அந்த நம்பருக்கு கால் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினேன்.
அதன்பிறகு நானும் அங்கே போனேன். அங்கே போனதும் என்னை வரவேற்று ’முதலில் தலைக்கு மசாஜ் பண்ணுவோம். நீங்கள் ரிலாக்ஸாக இருங்கள்’ என்றார்கள்.
சிறிது நேரத்தில் அவர்கள் எனக்கு மசாஜ் செய்ய ஆரம்பிக்கவும் அப்படியே தூங்கிவிட்டேன். அதுக்கப்புறம் ’கிர்’ருனு ஒரு சத்தம். நான் ஏதோ பிளைட்ல இருப்பதாக நினைத்துவிட்டேன். கொஞ்ச நேரம் கழித்து அந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் என்னை எழுப்பி, முகம் நிறைய பெருமிதத்துடன், ’கண்ணாடில உங்க ஹேர்ஸ்டைல பாருங்க சார்.. எவ்ளோ அழகா இருக்கு’ என்று கூறினார்.
அப்போதுதான் அவர்கள் என் தலையை முழுவதுமாக மொட்டையடித்துவிட்டார்கள் என்பதை உணர்ந்தேன். ஆனாலும், ‘சூப்பர் சார். இந்தியாவில் யாருமே இந்த மாதிரி ஸ்டைலா முடி வெட்ட மாட்டாங்க” என்று நான் சிரித்தபடியே கூறியதை அவர் நான் பாராட்டுவதாக ஏற்றுக்கொண்டார்.
’ஓகே சார். எவ்ளோ பில்?’ என்று கேட்டேன். அதற்கு, ’ரொம்ப அதிகம் இல்லை. வெறும் 120 டாலர் தான்’ என்றார். கிட்டத்தட்ட 4000 ரூபாய் மொட்டை அடிச்சிக்கிறதுக்கு.
தமிழ்நாட்டில் மக்கள் யாரும் எனக்கு மொட்டை அடிக்க (ஏமாற்ற) மாட்டார்கள். அதனால் தான் ஆண்டவன் என்னை நியூயார்க்ல மொட்டை அடிக்க வச்சிட்டான் என நினைத்துக்கொண்டேன்” என சிரித்தபடியே கூற, அரங்கத்தில் இருந்த அனைவரும் கைத்தட்டி அவரது பேச்சை வரவேற்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனையொட்டி வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி கூலி ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
படத்தை விடவும், அந்த நிகழ்ச்சியில் ரஜினி என்ன பேசப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களிடம் இப்போது எழுந்துள்ளது.