கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேற்று (பிப்ரவரி 25) உடல் உடல் நலக்குறைவால் 101 வயதில் காலமானார்.
நிறை வாழ்வு வாழ்ந்த முதுபெரும் அரசியல் ஆளுமை தோழர் நல்லகண்ணுவின் உடல் வைக்கப்பட்டுள்ள பாலன் இல்லத்தில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் தங்கள் தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரெட் சல்யூட்.. லால் சலாம்.. செவ்வணக்கம் முழுக்கங்களால் பாலன் இல்லம் நேற்று முதல் அதிர்ந்த வண்ணம் உள்ளது. இன்று அவரது உடல் சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக தானமாக வழங்கப்பட உள்ளது.
தோழர் நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின், நடிகர் ரஜினி காந்த் உள்ளிட்ட பல்வேறு முக்கியப்பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மரியாதை தானாக வரும்
தோழர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்திய பின் கூறுகையில், “ஓமந்தூரார், அறிஞர் அண்ணா, காமராஜர், கக்கன் ஆகியோரை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால், அவர்கள் எல்லோரையும் ஒன்றாகச் சேர்த்து தோழர் நல்லகண்ணு அவர்களிடம் நான் பார்த்தேன். ஒருவர் நல்லவராகவும், நேர்மையாகவும், எளிமையாகவும் இருந்தால் மதிப்பும் மரியாதையும் தானாகத் தேடி வரும் என்பதற்கு அவரே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அந்தப் பெரிய ஆத்மாவிற்கு என்னுடைய வீரவணக்கம்,” என உருக்கமாகத் தெரிவித்தார்.
மரணத்திலும் ஒரு பாடம்
சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த அவர், தமக்கு என்ன பயன் என்று யோசிக்காமல் மக்களுக்கும், தாம் கொண்ட கொள்கைகளுக்கும் என்ன பயன் என்பதையே சிந்தித்து வாழ்ந்தார். சுதந்திரப் போராட்டம் தொடங்கி நாட்டின் அனைத்துப் போராட்டங்களிலும் கடைசி மூச்சு வரை குரல் கொடுத்தவர். இத்தகைய மாபெரும் தலைவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இறந்த பின்பும் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்குத் தானம் செய்து, பயனுள்ள ஒரு காரியத்தைச் செய்துள்ளார். அவர் மறைந்தாலும் அவர் கொள்கைகள் நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும்,” என்றார்.
வருங்கால சந்ததியினர் நம்ப மறுக்கும் வாழ்க்கை
நல்லகண்ணு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி “நல்லகண்ணு ஐயா மிகவும் அரியதொரு தலைவர். மக்களின் பிரச்சினைகளுக்காகக் களத்தில் நின்று போராடுவதோடு, சட்டப் போராட்டங்கள் மூலமும் தீர்வுகளைப் பெற்றுத் தந்தவர். விவசாயிகளுக்காகவும், ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களுக்காகவும் ஓயாது குரல் கொடுத்தவர். இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்தார் என்பதை இன்னும் சில காலத்திற்குப் பிறகு சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். 101 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்து, தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் மக்களுக்கே வழங்கிய அவரது இழப்பு தமிழ்நாட்டிற்குப் பேரிழப்பாகும்,” என்றார் நடிகர் கார்த்தி.
அரசியல்வாதிகளின் முன்மாதிரி
நல்லகண்ணு உடலுக்க நேரில் அஞ்சலி செலுத்திய இயக்குநர் வெற்றிமாறன் கூறுகையில், “இந்தத் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக நம்மிடையே இருந்தவர். இவரைப் போன்ற ஒரு அரசியல் தலைவர் இனி நமக்குக் கிடைப்பாரா என்பது கேள்விக்குறிதான். இவரைப் பின்பற்றி இளம் தலைமுறை அரசியல்வாதிகள் வர வேண்டும் என்பதே எங்களைப் போன்ற பலரின் எதிர்பார்ப்பு,” எனத் தெரிவித்தார்.
கறைபடியாத மிகச்சிறந்த அரசியல்வாதி
நடிகர் நாசர் பேசுகையில், “அவர் மறைந்த துக்கத்தை விட, அவர் கடந்து வந்த நேர்மையான பாதையும் போராட்ட குணமும் நமக்குத் தெம்பைத் தருகிறது. யாருக்கும் தலைவணங்காத, எதற்கும் விலை போகாத ஒரு பெரும் தலைவர். அவர் வீட்டிற்குச் சென்றபோது சினிமா தொழிலாளர்களின் நலன் குறித்து என்னிடம் அக்கறையுடன் விவாதிப்பார். தற்போதைய அரசியலில் கறைபடியாத ஒரு அரசியல்வாதியாக அவர் திகழ்ந்தார். அவர் கடைப்பிடித்த ஏதோ ஒரு நற்பண்பையாவது நானும் கடைப்பிடித்து அவரை என் நினைவில் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறேன்,” எனத் தெரிவித்தார்.
