கேரளம்: அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல் – 5 பேர் மீது வழக்கு பதிவு

Published On:

| By Pandeeswari Gurusamy

Veena George

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் மீது கண்ணூர் ரயில் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸார் நடத்திய தாக்குதல் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணூரில் நடைபெற்ற பன்னாட்டு ஆயுர்வேத மருத்துவ ஆய்வு மாநாட்டை (International Ayurveda Research Conclave) நேற்று (பிப்ரவரி 25) தொடங்கி வைத்த அமைச்சர் வீணா ஜார்ஜ், பின்னர் திருவனந்தபுரம் செல்வதற்காகக் கண்ணூர் ரயில் நிலையத்திற்கு சென்றார்.

ADVERTISEMENT

அமைச்சர் வருவதை அறிந்த கண்ணூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் அமைப்பினர், மாவட்டத் தலைவர் தலைமையில் அங்கு திரண்டனர். கருப்புக் கொடிகளை ஏந்தியபடி அமைச்சருக்கு எதிராக அவர்கள் திடீர் முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி அமைச்சரை நோக்கிப் பாய்ந்ததில், போலீசாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது அமைச்சரின் கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாகப் பாதுகாப்புப் படையினர் அமைச்சரை மீட்டு சிகிச்சைக்காகக் கண்ணூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

காவல்துறை நடவடிக்கை:

இச்சம்பவம் தொடர்பாகக் கண்ணூர் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய மாவட்டத் தலைவர் அப்துல், பொருளாளர் அக்ஷய், மற்றும் முக்கிய நிர்வாகிகளான மெட்டல், பாலன், முகமது யாசின் ஆகிய ஐந்து பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலைய அத்துமீறல் குறித்து ரயில்வே போலீசாரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
பினராயி விஜயன் கண்டனம்

இந்தத் தாக்குதலுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கும் வன்முறைக்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு பழம்பெரும் கட்சியின் இத்தகைய வருந்தத்தக்க செயல் கண்டிக்கத்தக்கது. இது மாணவர் அமைப்பின் போராட்டம் அல்ல, திட்டமிட்ட வன்முறை வெறித்தனம்,” என்று சாடியுள்ளார்.

இதற்கிடையே, அமைச்சருக்கு நேர்ந்த இச்சம்பவத்தைக் கண்டித்து கேரளா முழுவதும் மாநில தழுவிய கண்டனப் போராட்டங்கள் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share