நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யை ஒன்றரை வயது தொட்டில் குழந்தை என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் மதுரையில் நடந்த தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டில் “எம்ஜிஆர் தொடங்கிய அ.தி.மு.க எப்படி இருக்கிறது? அப்பாவித் தொண்டர்கள் வேதனையில் தவிக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும், எப்படிப்பட்ட ஆட்சி அமைய வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்,” என்று பேசினார்.
விஜய்யின் இந்த பேச்சு, அ.தி.மு.க-வின் வாக்குகளை த.வெ.க-வுக்கு திருப்பும் உத்தியாகப் பார்க்கப்படும் நிலையில் அதிமுகவினர் இதற்கு கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “விஜய் இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக மதுரை மாநாட்டில் விஜய்யின் நடவடிக்கை இருந்தது. வலுவான அரசியல் இயக்கத்தை நடத்த கூடிய ஆற்றல் விஜய்யிடம் இருப்பது போல் தெரியவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தினம் ஒரு மாவட்டத்திற்கு சென்று வருகிறார். அப்படிபட்ட தலைவரை அடையாளம் தெரியாத தலைவரை பேசுவது போல் பேசுவது சிறுபிள்ளை தனமாக உள்ளது.
54 ஆண்டுகள் களம் பயின்று 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அதிமுகவைப் பற்றி குறைத்து மதிப்பிட்டு பேசுவது விஜய்யின் வீழ்ச்சிக்கு முதல் படி. எந்த ஒரு வெற்றியும் கிடைக்கும் வாய்ப்பு அவரது பேச்சில் தெரியவில்லை. ஜெயலலிதா மறைவிற்குப் பின் எடப்பாடி பழனிசாமியை பார்த்து ஏளனமும் நையாண்டியும் பேசினார்கள். ஆனால் தற்போது அவர் மேற்கொண்டு வரும் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை பார்த்து ஆளும் திமுக கட்சியினரே மிரண்டு போய் உள்ளனர். ஒன்றரை வயதுள்ள தொட்டில் குழந்தையாக இருக்கும் விஜய் அதிமுக கட்சியின் தலைமையைப் பற்றி பேசுவது கேளிக்குறியது.
இதே போல் பேசிய அதிக பேரை நாங்கள் பார்த்துள்ளோம். அதிமுகவை பற்றி சிறுபிள்ளைத்தனமாக பேசியவர்கள் அடையாளம் தெரியாமல் போன வரலாறு உள்ளது. மதுரை மாநாட்டில் யாரோ எழுதி கொடுத்த வசனத்தை விஜய் பேசி, நடித்துவிட்டு சென்று இருக்கிறார். விஜய் பேச்சில் அரசியல் கருத்துக்கள் ஏதும் இல்லை என்று விமர்சித்தார்.