அமைச்சர் ஐ பெரியசாமி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக உள்ள ஐ பெரியசாமி தொடர்புடைய இடங்களில் இன்று (ஆகஸ்ட் 16) காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஐ பெரியசாமியின் வீடு மற்றும் சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் உள்ள அவரது மகன் அறைகளில் அமலாக்க துறையினர் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது தலைமைச் செயலகத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையிலும் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஐ பெரியசாமி அறைக்குச் செல்லும் நுழைவு வாயில் பூட்டப்பட்டுள்ளது.
இந்த சூழலில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து ஏழு மணி நேரத்திற்கும் மேலாக ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.