இந்தியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல்காந்தி இன்று (ஏப்ரல் 3) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 26ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனையடுத்து அங்கு வேட்புமனுத்தாக்கல் கடந்த மாதம் மார்ச் 28ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இருபது தொகுதிகளில் 19 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கூட்டணி, இந்த முறையும் 20 இடங்களில் போட்டியிடுகிறது. அதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 16 இடங்களில் போட்டியிடுகிறது.
கடந்த முறை ஒரே ஒரு தொகுதியில் வென்ற ஆளும் சிபிஐ(எம்) தலைமையிலான கூட்டணியும் 20 இடங்களில் போட்டியிடுகிறது. அதில் சிபிஐ(எம்) கட்சி மட்டும் 15 இடங்களில் போட்டியிடுகிறது.
அதே போன்று, கடந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பாஜக கூட்டணியும் இந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் பாஜக மட்டும் 16 இடங்களில் களம் காண்கிறது.
பாஜகவை எதிர்த்து தேசிய அளவில் இந்தியா கூட்டணி அமைந்துள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள காங்கிரஸும், சிபிஐ(எம்) கட்சியும் கேரளாவில் தனித்து கூட்டணி அமைத்து போட்டியிடுவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் பி.பி.சுனீரை விட 4,31,770 அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் அங்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே அதே தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார் என்பதால், ராகுல் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டாம் என்று சிபிஐ கோரிக்கை வைத்தது.
அதனை காங்கிரஸ் ஏற்காத நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை, தான் முன்னெடுப்பதாக கூறும் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு எதிராக ஏன் போட்டியிடுகிறார்? என்று டி.ராஜா கேள்வி எழுப்பினார்.
அதே போன்று வயநாடு தொகுதிக்குட்பட்ட கோழிக்கோட்டில் நேற்று ஆனி ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த கேரள முதல்வர், “வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவது பொருத்தமற்றது என்று தெரிவித்தார்.
அவர், “பாஜகவை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து ராகுல்காந்தியை வயநாட்டில் நிறுத்துவது பொருத்தமற்றது. அவர் கேரளாவில் முக்கிய அரசியல் சக்தியாக இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போராடுவதற்காக வந்துள்ளார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், இடதுசாரி தலைவர் ஆனி ராஜாவுக்கு எதிராகவும் ராகுல்காந்தி போட்டியிடுவது என்ன நியாயம்? அவர் வயநாட்டில் பாஜகவை எதிர்த்து போட்டியிடவில்லை. அவர் எங்களுக்கு எதிராகவே போட்டியிடுகிறார்” என்று கடும் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
இந்த எதிர்ப்பையெல்லாம் மீறி இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கேரளா வந்தார் ராகுல்காந்தி.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி திறந்த வேனில் தனது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால் ஆகியோருடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
https://twitter.com/INCKerala/status/1775421501359137182
வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து அவருக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.
ராகுலை எதிர்த்து போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர் ஆனி ராஜாவும், பேரணியாக சென்று இன்று வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இன்றுடன் ஓய்வு பெறும் மன்மோகன் சிங் : நன்றி தெரிவித்த ஸ்டாலின்
மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார் எல்.முருகன்
வள்ளலார் சர்வதேச மையம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!