தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாஜகவால் ஒருபோதும் நீதி வழங்க முடியாது, சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் நடத்தும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நேற்று(பிப்ரவரி 8) நடைபெற்ற பாரத நியாய யாத்திரை நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி தன்னை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்று நாட்டு மக்களிடம் பொய் சொல்கிறார்.
அவர் குஜராத்தில் உள்ள தெலி சமூகத்தை (பொதுப்பிரிவு) சேர்ந்தவர். கடந்த 2000-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது, பொதுப்பிரிவான தெலி சமூகம் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
பிரதமர் மோடி இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர் இல்லை என்பதால், தன் வாழ்நாள் முழுவதும் அவர் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்க மாட்டார்”, என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தன்னுடைய எக்ஸ் பதிவில்,
“உண்மை வெல்லும், பொய் சிதையும். மீண்டும் ஒருமுறை ராகுல் காந்தி வெட்கமின்றி பொய்களை பரப்புகிறார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி மோடி குஜராத் முதல்வராக ஆவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, ஓபிசி அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்டது. காங்கிரஸ் மீண்டும் ஓபிசி சமூகத்தை அவமதிக்கிறது. ஓபிசிக்கள் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி, “ஒரு நாளைக்கு மூன்று முறை உடைகளை மாற்றி, ரூ.9 லட்சம் மதிப்புள்ள சூட் அணிந்து, ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பேனாவை பயன்படுத்தும் பிரதமர் மோடிக்கு ஓபிசி என்றால் ஒரே பிசினஸ் கிளாஸ் தான்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களால் ஒருபோதும் நீதி வழங்க முடியாது. பேப்பர் ஓபிசிக்களின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் நடத்துவோம்” என்றார்.
பிரதமர் மோடியின் சமூகம் குறித்து பேசிய ராகுல் காந்திக்கு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : தொழிலாளர்களின் நிலை?
இந்தியாவில் எத்தனை கோடி வாக்காளர்கள்? – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!