கோவையில் நகைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (பிப்ரவரி 9) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் அதிகளவிலான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதுபோன்று குனியமுத்தூர் அடுத்த அறிவொளி நகர பகுதியில் தங்க வெள்ளி நகைகளுக்குப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையான EMBELLSGE என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இது அந்த பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்பவருக்கு சொந்தமானதாகும். இங்கிருந்து நகைப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு நகைக்கடைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று மதியம் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியிலிருந்தனர்.
அப்போது தீடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதனை அணைக்க அங்கிருந்த தொழிலாளர்கள் முயன்றனர். ஆனால், தீ சிறிது நேரத்தில் மளமளவெனத் தொழிற்சாலை முழுவதும் பரவ தொடங்கியதால் உடனடியாக தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.
தீ விபத்து குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலில் தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்க முயன்ற நிலையில், அதுமுடியாததால் தீயை அணைக்க பயன்படுத்தப்படும் ரசாயனத்தைக் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், அதற்குள்ளாகவே நகைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து அருகாமையில் உள்ள பிளாஸ்டிக் குடோனுக்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணி தீவிரமாக நடைபெற்றும் வரும் நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசாரும் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன.
தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இந்தியாவில் எத்தனை கோடி வாக்காளர்கள்? – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!