வைரமுத்துவின் ஆணவப்படுகொலைக்கு நீதிகேட்டு கோவையில் போராட்டம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Protest demanding justice for honor killing

தமிழக அரசு ஆணவப்படுகொலைக்கு எதிரான தனி சட்டத்தை கொண்டு வர வேண்டும். வைரமுத்துவின் ஆணவப்படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை அருகே அடியமங்கலத்தைச் சேர்ந்தவர் குமார் என்பவரது மகன் வைரமுத்து (வயது 26). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர், மயிலாடுதுறை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியத்தலைவராக இருந்து வருகிறார். இவர் 10 ஆண்டுகளாக மாலினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பெண்ணின் தாய் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெண்ணின் சகோதரர்களான குணால், குகன்(24), சித்தப்பா பாஸ்கர்(42), உறவினர்கள் சுபாஷ்(26), கவியரசன்(23), அன்புநிதி(19) ஆகிய 6 பேர் வைரமுத்துவை வெட்டி கொலை செய்தனர். இதில் குணாலை தவிர மற்ற 5 பேரையும் அதிரடியாக காவல் துறையினர் கைது செய்தனர். தலைமறைவான குணாலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். பெண்ணின் தாயார் விஜயாவையும் கைது செய்தனர்.

இந்நிலையில் வைரமுத்துவின் ஆணவப்படுகொலைக்கு நீதி கேட்டு, கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு ஜாதி ஆணவ படுகொலைக்கு துணை போகாமல் சட்டமியற்றக்கோரி கண்டன கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் , கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் போராட்டக்காரருக்கும் காவல் துறையினருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்பதை, வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share