பிரதமர் மோடி இன்று பிற்பகல் கோவை வரும் நிலையில் மெட்ரோ திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கோவை மக்களின் நீண்டகால கனவாக மெட்ரோ ரயில் திட்டம் உள்ளது. ஆனால் மத்திய அரசு மக்கள் தொகையை காரணம் காட்டி மெட்ரோ திட்டதத்தை ரத்து செய்து விட்டது. மேலும் மெட்ரோ ரயில் திட்ட கொள்கை 2017ன் படி 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மட்டுமே மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி கொடுக்கமுடியும். ஆனால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கோவையில் 15.84 லட்சம் பேர் மட்டுமே இருப்பதாகவும், மதுரை நகர்ப்புற பகுதியில் 14.7 லட்சம் பேர் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் பாஜக ஆளும் 20 லட்சத்துக்கும் குறைவாக உள்ள இரண்டாம் கட்ட நகரங்களான ஆக்ரா (16 லட்சம்), பாட்னா (17 லட்சம்), போபால் (18 லட்சம்) ஆகிய பகுதிகளுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் கோவை மெட்ரோ திட்டத்தை ரத்து செய்ததற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது, “கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு புறக்கணித்து, திட்ட அறிக்கை திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது. 2011ஆம் ஆண்டில் மத்திய அரசு 21 நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்தது. அதில் 16வது இடத்தில் கோவை இருந்தது. எனவே மக்கள் தொகையை காரணம் காட்டி இருப்பதை ஏற்று கொள்ள முடியாது. கோவையை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட கொச்சி, பட்னா நகரங்களிலும், மத்திய அரசின் திட்டத்தில் இல்லாத ஆக்ரா, போபால் போன்ற நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றி விட்டு, இந்தியாவில் மிக சிறந்த நகரமாக வளர்ந்து வரும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மறுப்பது கண்டிக்கத்தக்கது. கோவைக்கும், மதுரைக்கும் மோடி அரசு துரோகம் இழைத்திருக்கிறது.
இந்த நிலையில் கோவைக்கு பிரதமர் மோடி வருகையை கண்டிக்கிறோம். பிரதமர் மோடி கோவை, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளிக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
