தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான புதிய திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் திட்டத்தால் தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமை பறிபோகும். இதனால் தமிழக அரசு, மேகதாது அணைக்கான அனைத்து முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்து வருகிறது.
மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே கர்நாடகா அரசு கொடுத்துள்ளது. இந்த திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் தரக் கூடாது என உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடியது.
ஆனால் உச்சநீதிமன்றமோ, கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்யலாம்; மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் அதன் பின்னர் தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தை நாடலாம் என கூறி தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன் பின்னர் பெங்களூருவில் நேற்று காவிரி நீர்ப்பாசன கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் சித்தராமையா கூட்டினார். இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், மேகதாது அணைக்கான புதிய திட்ட அறிக்கையை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்புதிய அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும்.
மேகதாது திட்ட அலுவலகம், ராமநகர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு தனியே ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.
மேகதாது அணைக்கான திட்ட அனுமதியை மத்திய நீர் ஆணையம் வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசு இனியும் கால தாமதம் செய்யாது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்; மேகதாது அணை கட்டினாலும் தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை வழங்குவோம் என்றார்.
