குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் கான்கிரீட்டில் புதைந்ததால் சற்று நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் பயணமாக நேற்று கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்தடைந்த அவரை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகைக்கு சென்ற குடியரசுத் தலைவர், இன்று காலை சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டார்.
தற்போது மழை பெய்து வருவதால் மோசமான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக குடியரசு தலைவர் பயணித்த ஹெலிகாப்டர் நிலக்கல் ஹெலிபேடு தளத்தில் இறங்குவதற்கு பதிலாக தற்காலிகமாக ஹெலிபேடு அமைக்கப்பட்டிருந்த பிரமாடம் என்ற இடத்தில் தரையிறங்கியது.
காலை 9.05 மணிக்கு தரையிறங்கிய நிலையில் அதிலிருந்து குடியரசு தலைவர் இறங்கி சாலை மார்க்கமாக பம்பைக்கு புறப்பட்டார். அவர் சென்ற சற்று நேரத்தில் சரியாக செட் ஆகாத கான்கிரீட்டில் ஹெலிகாப்டரின் டயர் புதைந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக தீயணைப்பு துறையினரும், போலீசாரும் இணைந்து செயல்பட்டு ஹெலிகாப்டரை தள்ளி நிறுத்தியுள்ளனர்.
ஹெலிகாப்டர் கான்கிரீட்டில் சிக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
