தமிழக காங்கிரஸ் கமிட்டியில் 71 மாவட்டத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸின் உண்மையான அடிமட்டப் பலத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமை என பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் தீவிரமடைந்துள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு தரப்பினர் முன்வைத்து வருகின்றனர். பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட சிலர் தவெகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் 71 மாவட்டங்களுக்கான தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சூழலில், காங்கிரஸின் உண்மையான பலத்தை நிரூபிக்க வேண்டும் என பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் நிர்வாகியும், ராகுல் காந்தியின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பதிவில்,
“புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும் வாழ்த்துகள். மற்ற எந்தக் கட்சிக்கும் அடிபணியாமல், சுயமரியாதை மற்றும் தன்னாபிமானத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். காங்கிரஸின் உண்மையான அடிமட்டப் பலத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமையாகும். வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
