பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் எச்.டி.ரேவண்ணா. இவர் தற்போது எம்எல்ஏவாக உள்ளார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் ஹாசன் தொகுதி எம்.பி ஆக இருந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஹாசன் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அப்போது அவர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோக்கள் கசிந்தது. இதைத்தொடர்ந்து தன் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் உள்ளிட்ட நான்கு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது. விசாரணை நடந்து வந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பி ஜெர்மன் சென்றார். பின்னர் ஜெர்மனியில் இருந்து திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை காவல்துறையினர் கைது செய்து பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்தனர்.
மைசூர் மாவட்டம் ஆர்.கே.நகரை சேர்ந்த பனிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசாரணை முடிந்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 14 மாதங்களாக நடைபெற்ற வழக்கில் நேற்று ஆகஸ்ட் 1ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.
தீர்ப்பை கேட்டதும் நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா கதறி அழுதார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட்-2) பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
மேலும் 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை கேட்டு இன்று மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா கதறி அழுதார்.