ADVERTISEMENT

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை – 2 பேர் பணியிடை நீக்கம்!

Published On:

| By Minnambalam Desk

2 police suspended for suicide at Udumalai Forest Reserve office

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி மாரிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கேரள எல்லையில் உடுமலை மூணாறு மலைப்பகுதியில் சின்னார் சோதனை சாவடியில் கேரள காவல்துறையினர் கடந்த 30ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். உடுமலை பகுதியில் இருந்து கேரளா மாநில அரசு பேருந்து மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தது.

ADVERTISEMENT

சோதனைச் சாவடியில் இருந்த கலால் துறை அதிகாரிகள் பேருந்து நிறுத்தத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தில் பயணம் செய்த திருப்பூர் உடுமலை தாலுகா தளி அருகே திருமூர்த்தி நகர் மேல் குருமலை பகுதி பழங்குடியின தொழிலாளி மாரிமுத்து சிறுத்தை பல் ஒன்றை வைத்திருப்பதை கண்டு பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த கேரள அதிகாரிகள் தமிழக வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மாரிமுத்துவை உடுமலை வனச்சரக அலுவலகத்தில் வைத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி அதிகாலை 4.15 மணியளவில் மாரிமுத்து வனத்துறை அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று காலை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாரிமுத்து உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாரிமுத்துவின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்சி எஸ்டி வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் காவல்துறை நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து நேற்று இரவு 7.45 மணியளவில் உறவினர்கள் உடலை வாங்கி அடக்கம் செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு மாரிமுத்து மரணம் குறித்து விசாரணை தொடங்கியது. இதில் முதல் கட்டமாக பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரக வனவர் நிமல் மற்றும் வனக் காவலர் செந்தில்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share